search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தி ராமர் கோவில் 2,500 ஆண்டுகள் நிலைத்து இருக்கும்: கட்டிட வடிவமைப்பாளர்
    X

    அயோத்தி ராமர் கோவில் 2,500 ஆண்டுகள் நிலைத்து இருக்கும்: கட்டிட வடிவமைப்பாளர்

    • அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டிட கலையில் கட்டப்படுகிறது.
    • சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை. அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது.

    அயோத்தி:

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டிட வடிவமைப்பை குஜராத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோமபுரா என்பவர் தான் செய்து இருக்கிறார். அவருக்கு 80 வயது ஆகிறது. அவரது மகன்கள் நிகில் மற்றும் ஆசிஷ் ஆகியோர் கண்காணிப்பில் தான் தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவில் கட்டுமானம் குறித்து சந்திரகாந்த் சோமபுரா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

    அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- அயோத்தி ராமர் கோவில் வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

    பதில்:- எங்களது சோமபுரா குடும்பம் பல ஆண்டுகளாக கோவில் கட்டும் பணியை செய்து வருகிறோம். நான் அதில் 15-வது தலைமுறை. எனது தந்தை தான் சோம்நாத் கோவிலை கட்டினார். பிர்லா மந்திர் கோவில்கள் எல்லாம் எங்களால் கட்டப்பட்டவை தான். எனவே தொழில் அதிபர் பிர்லா தான், அப்போது விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்லால் சிங்காவிடம் என்னை பரிந்துரை செய்தார்.

    கேள்வி:- அயோத்தி ராமர் கோவில் வரைபடம் தயாரித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

    பதில்:- ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும், அதற்கு வடிவமைப்பு செய்து தாருங்கள் என்று 1989-ம் ஆண்டு என்னிடம் கேட்டார்கள். அதற்காக என்னை கோவில் வளாகத்திற்குள் அழைத்து சென்றார்கள். அப்போது இங்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதனால் கட்டிட அளவு எடுப்பதற்கான உபகரணங்கள், பேனா, பென்சில், பேப்பர் என எந்த பொருட்களையும் எடுத்து வர முடியவில்லை. இதனால் நான் நடந்தே அளவு எடுத்தேன். ஒவ்வொரு அளவையும் எனது மனதில் குறிப்பு எடுத்து வைத்து கொண்டேன். பின்னர் வீட்டிற்கு திரும்பியவுடன் கோவில் கட்டுமானத்திற்கு 3 வரைபடங்கள் தயாரித்தேன். அதனை அடிப்படையாக கொண்டு, மரத்தால் கோவில் மாதிரியை உருவாக்கினேன். இந்த கோவில்கள் 1992-ம் ஆண்டு நடந்த கும்பமேளா விழாவின்போது சாமியார்கள் பார்வைக்கு வைத்தேன். அதில் அவர்கள் தேர்வு செய்த ஒன்றுதான் அயோத்தி ராமர் கோவிலாக தற்போது உருவாகி வருகிறது.

    கேள்வி:- பல நாற்றாண்டுகளை தாண்டி நிலைத்து இருக்கும் தென்னகத்து கோவில்களான மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில்களுடன் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தை ஒப்பிட முடியுமா?

    பதில்:- மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவிலுக்கு எல்லாம் நானும் வந்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக, கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன. அதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் கோவில்கள் என்பது வெறும் கட்டிட கலை அல்ல. அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு சென்றால் நமக்கு ஒரு அதிர்வலைகளை அது ஏற்படுத்த வேண்டும். மன நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை தர வேண்டும். இவற்றை மீனாட்சி அம்மன் கோவில்போல் அயோத்தி ராமர் கோவிலும் பக்தர்களுக்கு தரும் என்பதில் நீங்கள் எள்ளளவும் சந்தேகப்பட வேண்டாம். அதே நேரத்தில் அயோத்தி கோவில் கட்டுமானத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பழங்கால முறைப்படி, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வரும் கோவில் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    கேள்வி:- நீங்கள் குறிப்பிடும் பழங்கால முறைப்படியான கட்டுமானம் என்பது எது?

    பதில்:- அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டிட கலையில் கட்டப்படுகிறது. இந்த கோவிலுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது. கற்களின் ராஜாவான ராஜஸ்தான் இளஞ்சிவப்பு கற்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கற்கள் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும். கோவில் கட்டுமானத்தில் இரும்பு, உருக்கு போன்று எந்த உலோகங்களையும் பயன்படுத்தவில்லை. பழங்கால முறைப்படி வெறும் கற்கள் மூலமே, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படுகிறது. இந்த கோவில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்து இருக்கும். அதனை தற்போது உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். நிலநடுக்கம், வெள்ளம்-மழை போன்ற எந்த ஒரு பேரிடரையும் தாங்கி நிற்கும் அளவுக்கு கோவில் மிக வலுவாக கட்டப்பட்டு வருகிறது. பழங்கால கோவில்களில் உள்ளது போன்று அயோத்தி கோவிலிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    கேள்வி:- சனாதன தர்மத்திற்கான கோவில் என்பதனை எப்படி புரிந்து கொள்வது?

    பதில்:- சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை. அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது. ஒவ்வொரு மனிதனும் அதனை கடைபிடிக்க வேண்டும். அது மதத்திற்கானது அல்ல, மனிதனுக்கு ஆனது என்ற பார்வையில் அதனை அணுக வேண்டும். அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் வெறும் ராமர் கோவில் மட்டுமின்றி இதர தெய்வங்கள் கோவிலும் கட்டப்பட உள்ளது.

    கேள்வி:- இந்த கோவிலின் சிறப்பம்சமாக எதனை நீங்கள் சொல்வீர்கள்?

    பதில்:- அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் கட்டுவதே மாபெரும் சிறப்பானது. சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில், 58 ஆயிரம் சதுரடியில் 3 தளங்களுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதன் கருவறை எண்கோண வடிவத்தில் கட்டப்படுகிறது. அதுதான் கோவிலின் உச்சபட்ச சிறப்பு அம்சம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×