search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் கன்னட மொழியை கட்டாயமாக்க சட்டம்: பசவராஜ் பொம்மை
    X

    கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் கன்னட மொழியை கட்டாயமாக்க சட்டம்: பசவராஜ் பொம்மை

    • கன்னடம், மொழியாக அல்லாமல் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
    • கன்னடம் நமது தாய்மொழி மட்டுமின்றி தேசிய மொழியும் கூட.

    பெங்களூரு :

    கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அத்துடன் கன்னட கொடியையும் ஏற்றினார். அதைத்தொடர்ந்து அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் அவர் உரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    கன்னடம் நமது தாய்மொழி மட்டுமின்றி தேசிய மொழியும் கூட. கர்நாடகத்தில் அனைத்து துறைகளிலும் கன்னட மொழி பயன்பாட்டை கட்டாயமாக்க வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்படும். கன்னடத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்படும்.

    கன்னடத்திற்காகவே வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும். கன்னடம் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும். கர்நாடகத்தில் அடுத்த 3, 4 ஆண்டுகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    ரூ.7 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்தால் கர்நாடகம் வளர்ச்சி அடையும். கன்னடம், மொழியாக அல்லாமல் நமது வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

    கர்நாடகத்தில் ஒரே ஆண்டில் 8 ஆயிரம் பள்ளி கட்டிட வகுப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். 1956-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் உருவானது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இவ்வாறு வகுப்பறை கட்டிடங்களை கட்டினால் பள்ளி கட்டிடங்களுக்கு பற்றாக்குறை இருக்காது. 'விவேகா' என்ற பெயரில் நாங்கள் பள்ளி கட்டிடங்களை கட்டுகிறோம்.

    கர்நாடகத்தில் அரசு துறைகளில் 2½ லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். நடப்பாண்டில் 1 லட்சம் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இந்த காலியிடங்கள் நிரப்பும்போது கன்னடர்களுக்கு வேலை கிடைக்கும். கர்நாடகத்தில் நாளை (இன்று) உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதன் மூலம் சுமார் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    கர்நாடகத்தில் 10 வேளாண் மண்டலங்கள் உள்ளன. இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்து அணை, ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். வறட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அடுத்த 3, 4 ஆண்டுகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. வீடுகளை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் அறிவுசார் அடிப்படையிலான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆராய்ச்சியில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. அதனால் கர்நாடகம் அறிவுசார் மாநிலம் ஆகும். நமது மண்ணில் ஞானம், உழைப்பு, உழைப்புக்கு மரியாதை உள்ளது.

    விவசாய வித்யா திட்டத்தின் கீழ் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 6 லட்சம் குழந்தைகளுக்கு இந்த உதவித்தொகையை வழங்கியுள்ளோம். 5 லட்சம் பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கு உதவி செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். கிராமப்புற இளைஞர்களுக்கு சுயதொழில் செய்ய உதவி செய்கிறோம்.

    நாட்டிலேயே அதிக ஞானபீட விருதுகளை பெற்ற மாநிலம் கர்நாடகம்.உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றால் நாம் பல்வேறு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

    நமது கலாசாரம் சிறப்பானது. கன்னட கொடியை எல்லா துறைகளிலும் பறக்க விட வேண்டும். நல்ல கல்வி, சுகாதாரம், வேலை, தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் அடிப்படை வசதிகளை கொண்ட எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டியது அவசியம். அவ்வாறு செய்தால் உலகிலேயே கர்நாடகம் சிறந்த மாநிலமாக திகழும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கன்னட மொழி மீது உணர்வு பூர்வமாக பற்றை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடினர். இந்த விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    Next Story
    ×