search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை: பசவராஜ் பொம்மை திட்டவட்டம்
    X

    நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை: பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

    • காங்கிரஸ் ஆட்சியில் 59 ஊழல் முறைகேடு வழக்குகள் இருந்தன.
    • சித்தராமையாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் மாடால் விருபாக்ஷப்பாவை முதல் குற்றவாளியாக லோக்அயுக்தா போலீசார் சேர்த்துள்ளனர். அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கைது செய்ய கோரியும், முதல்-மந்திரி பதவி விலக கோரியும் நேற்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டை முற்றுகையிட சென்ற முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்பட நூற்றுக்கணக்கானாரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், இதுகுறித்து சித்ரதுர்காவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் 59 ஊழல் முறைகேடு வழக்குகள் இருந்தன. அந்த முறைகேடுகள் வெளியே வராமல் இருக்கத்தான் சித்தராமையா லோக் அயுக்தாவுக்கு மூடு விழா நடத்தி விட்டு, ஊழல் தடுப்பு படையை கொண்டு வந்திருந்தார். லோக் அயுக்தா இருந்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தும் வெளியே வந்திருக்கும். இப்படிப்பட்ட சித்தராமையாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு இல்லை.

    சித்தராமையா ஆட்சியில் ஒரு மந்திரி ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி இருந்தார். மந்திரி லஞ்சம் வாங்கியதற்காக முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்திருந்தாரா?. அப்படி இருக்கையில் என்னை ராஜினாமா செய்ய சொல்வதற்கு சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் என்ன தகுதி இருக்கிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் காரணங்களுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ், இந்து அமைப்பினர் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

    இந்த கொலைக்கு காரணமான பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் மீது பதிவாகி இருந்த வழக்குகள் காங்கிரஸ் ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற கீழ்மட்ட அரசியலை காங்கிரஸ் கட்சி மட்டுமே செய்கிறது.

    எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா லஞ்ச விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு தெரிவித்துள்ளேன். அவர், பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா?, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வாரா? என்பது பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள்.

    லோக் அயுக்தா அமைப்பு சுதந்திரமானது. இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகளை போலீசார் எடுப்பார்கள். எனவே நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×