search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    4 வயது மகனை கொன்று உடலை பையில் அடைத்த பெண் அதிகாரி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    4 வயது மகனை கொன்று உடலை பையில் அடைத்த பெண் அதிகாரி

    • சுசனா சேத் அறையை காலி செய்தபோது அவருடன் வந்த மகன் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
    • சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை கார் வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார்.

    பனாஜி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனரும், மைண்ட்புல் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் சுசனா சேத் (வயது39) என்ற பெண்மணி உள்ளார்.

    இவர் கடந்த 6-ந்தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபலமான அபார்ட்மெண்ட் ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று அதிகாலை ஓட்டல் அறையை காலி செய்து விட்டு அவர் காரில் பெங்களூரு திரும்பினார்.

    இந்நிலையில் அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கறைகள் படிந்திருந்ததும், கறைகள் படிந்த துணிகளை பார்த்தும் அதிர்ச்சியடைந்து ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    சந்தேகம் அடைந்த அவர்கள் சுசனா சேத் அறையை காலி செய்தபோது அவருடன் வந்த மகன் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் ஓட்டல் நிர்வாகத்தினருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் போலீஸ் நிலையத்தில் விவரங்களை தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஓட்டல் அறையில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது சுசனா சேத் தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் திரும்பி செல்லும்போது மகனை அழைத்து செல்லவில்லை என்பது உறுதியானது. அதே நேரம் ஓட்டல் பணியாளர்களிடம் விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

    சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக வாடகை கார் வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு வரவேற்பாளர் இங்கிருந்து விமான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவுதான். எனவே அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவுறுத்திய நிலையிலும் சுசனா சேத், டாக்சியில் தான் பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

    அதன்படி வந்த டாக்சியில் சுசனா சேத் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கையில் ஒரு பேக்கை சுமக்க முடியாமல் எடுத்து சென்ற காட்சிகளையும் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பெரிய நிறுவனத்தின் அதிகாரியாக திகழும் சுசனா சேத் யாருடைய உதவியையும் கேட்காமல் பெரிய பேக்கை எடுத்து சென்றது ஏன்? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவருடன் வந்த மகன் எங்கே என்ற கேள்விக்கும் விடை தெரியாததால் போலீசார் திகைத்தனர்.

    இவ்வாறாக அடுத்தடுத்து சந்தேகங்கள் வலுத்ததால் போலீசார் சுசனா சேத் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் எங்கே? என விசாரித்தனர். அப்போது சுசனா சேத்தை தனது மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றுள்ளதாக கூறினார்.

    ஆனால் அவர் கூறிய முகவரியை போலீசார் சரிபார்த்தபோது அது போலி முகவரி என தெரிய வந்தது. இதனால் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதும், காரில் சுசனா சேத்தின் மகன் இல்லை என்பதும் உறுதியானது.

    இதைத்தொடர்ந்து கார் டிரைவரை அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு செல்லுமாறு போலீசார் கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா போலீஸ் நிலையத்திற்கு காரை ஓட்டி சென்றார். அங்கு கோவா போலீசார் கூறியபடி, காரை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தபோது காரில் இருந்த பையில் சுசனா சேத்தின் மகன் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் சுசனா சேத்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது மகனை கொன்றுவிட்டு உடலை பையில் அடைத்து காரில் எடுத்து சென்றது தெரியவந்தது. ஆனால் கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் சுசனா சேத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×