search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ- பீகாரில் ஒருவர் கைது
    X

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ- பீகாரில் ஒருவர் கைது

    • வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்.
    • பீகாரில் 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக ஏடிஜிபி கூறினார்.

    பாட்னா:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியது. இது தமிழகத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. பீகார் சட்டசபையிலும் இது எதிரொலித்தது.

    புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான, பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டுள்ளதாகவும், இந்த பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய ஒரு நபரை பீகார் காவல்துறை கைது செய்திருப்பதாக ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்காவர் தெரிவித்தார். போலியான பதிவை வெளியிட்டவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது எனவும், ஏடிஜிபி கூறினார்.

    கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமார் என்பது தெரியவந்துள்ளது. தவறான தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பியதாக பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது செல்போனில், அதுபோன்ற பல வீடியோக்கள் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    Next Story
    ×