என் மலர்
இந்தியா
விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜ.க.: கார்கே குற்றச்சாட்டு
- மராட்டிய மாநில விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜனதாதான்.
- அங்கு 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
பா.ஜனதா ஆட்சி நடக்கும் மராட்டிய மாநிலத்தில், அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மராட்டிய மாநில விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜனதாதான். அங்கு 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயத்துக்கான நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டு விட்டது. மராட்டிய மாநிலத்தை வறட்சியற்ற மாநிலம் ஆக்குவோம் என்ற வாக்குறுதி வெற்று முழக்கமாகி விட்டது.
காப்பீட்டு நிறுவனங்களுக்கு பா.ஜனதா அரசு ரூ.8 ஆயிரம் கோடி வழங்கி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுத்து விட்டது.
வெங்காயம், சோயாபீன் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டதால் அவற்றை விளைவிக்கும் விவசாயிகள் ஏற்றுமதி வரி சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தி, கரும்பு உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் சிக்கலில் உள்ளன. அதை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தநிலையில் பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசை அகற்றினால்தான் விவசாயிகளுக்கு நன்மை விளையும் என்று மராட்டிய மாநிலம் முடிவு செய்து விட்டது. மகாபரிவர்த்தன் என்ற காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.