search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாற்காலி யாருக்கு?.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி - முதல்வர் பதவிக்கு போட்டா போட்டி!
    X

    நாற்காலி யாருக்கு?.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி - முதல்வர் பதவிக்கு போட்டா போட்டி!

    • பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை ஆகும்
    • என்சிபி கிங்மேக்கராக இருக்கும் என்று கூறினார்.

    தேர்தல் முடிவுகள்

    மகாராஷ்டிர மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.

    பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரபடி பாஜக [ மகாயுதி] கூட்டணி 223 இடங்களில் முன்னிலையில் உள்ளது, காங்கிரஸ் [மகா விகாஸ் அகாதி] 54 இடங்களிலும் பிற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

    முதல்வர் யார்?

    பாஜகவின் மகாயுதி கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது சிவ சேனா பிரிவை சேர்த்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ள நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் என்சிபியின் அஜித் பவார் துணை முதல்வர்களாக உள்ளனர். கூட்டணியை சேர்ந்த மூன்று கட்சிகளும் அடுத்த முதல்வராக தங்கள் தலைவரையே கொண்டுவர வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகின்றன.

    நல்ல முடிவு

    அந்த வகையில் மகாயுதி சிவசேனா எம்.எல்.ஏ.வும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ஷிர்சத் கூறுகையில், சட்டசபை தேர்தலில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை முன்னிறுத்தியே நடந்தது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் ஏக்நாத் ஷிண்டே மீது விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர். அடுத்த முதல்வராவது ஷிண்டேவின் உரிமை என்று நான் நினைக்கிறேன், அவர் அடுத்த முதல்வராக வருவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று ஷிர்சட் தெரிவித்தார்.

    ஆனால், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆக வேண்டும் என்று பாஜக தலைவர் பிரவின் தரேகர் விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜகவில் இருந்து யாராவது முதல்வர் ஆகிறார் என்றால் அது தேவேந்திர பட்னாவிஸ் தான் என நினைக்கிறேன் என்று தெரிவித்தார். முன்னதாக பட்னாவிஸ் 2014 முதல் 2019 வரை முதல்வராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் என்சிபி தலைவர் அமோல் மிட்காரி கூறுகையில், துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் முதல்வர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். மேலும் முடிவுகள் என்னவாக இருந்தாலும், என்சிபி கிங்மேக்கராக இருக்கும் என்று மிட்காரி கூறினார்.

    இதற்கிடையே முதல்வர் முகத்தைப் பற்றி கேட்டதற்கு, மூன்று மஹாயுதி கட்சிகளும் ஒன்றாக அமர்ந்து நல்ல முடிவை எடுக்கும் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளில் யாருக்கு அதிக இடங்கள் வெற்றி கிடைக்கிறதோ அதைப் பொறுத்தே முதல்வர் பதவி தீர்மானிக்கப்படும் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த முறை கட்சியை உடைத்து வந்ததால் ஏக்நாத் ஷிண்டேவுக்கு பாஜக முதல்வர் பதவி வழங்கியது என்றும் இந்த முறை மற்றொரு பதவியை தங்கள் வசம் வைத்துக்கொள்ள பாஜக விரும்புவதாகவே செய்திகள் வருகின்றன.

    நிலவரம்

    அந்த வகையில் பார்த்தால், 149 இடங்களில் நின்ற பாஜக 127 இடங்களில் முன்னிலை வகிக்கிறது 81இடங்களில் போட்டியிட்ட ஷிண்டே சிவசேனா 56 முன்னிலை வகிக்கிறது. 59இடங்களில் போட்டியிட்ட அஜித் பவார் கட்சி 38 முன்னிலையில் உள்ளது. எனவே தேவேந்திர பட்னாவிஸை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க பாஜக மேலிடம் தீவிரம் காட்டும் என்றே தெரிகிறது.

    Next Story
    ×