search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி
    X

    நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி

    • புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நயாப்சிங் சைனி பதவி ஏற்றார்.
    • நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது.

    யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜெ.ஜெ.பி.) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து பா.ஜனதா ஆட்சி பொறுப் பேற்றது.

    பா.ஜனதாவை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும், ஜெ.ஜெ.பி.யை சேர்ந்த துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகவும் இருந்தனர். பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் நேற்று பதவி விலகினார்கள். இதையடுத்து புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நாயப்சிங் சைனி பதவி ஏற்றார்.

    அவருடன் பா.ஜனதாவை சேர்ந்த கன்வர் பால், மூலசந்த் சர்மா, ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரி லால், சுயேட்சை எம்.எல்.ஏ. ரஞ்ஜித்சிங் சவுதாலா ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இந்த 5 பேரும் கட்டார் அமைச்சரவையில் பதவி வகித்தவர்கள் ஆவார்கள். ஜனநாயக ஜனதா கட்சிக்கு மொத்தம 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் 5 பேர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் அரியானா சட்டசபையில் இன்று நடந்த சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது விவாதம் நடைபெற்றது.

    சட்டசைப கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கொறடா வின் உத்தரவை மீறி 5 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    90 உறுப்பினர்கள் கொண்ட அரியானா சட்டசபையில் தற்போது பா.ஜனதாவுக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அரசுக்கு 6 சுயேட்சை மற்றும் அரியானா லோகித் கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவு உள்ளது.

    எனவே ஜெ.ஜெ.பி. ஆதரவு இல்லாவிட்டாலும் பெரும்பான்மக்கு தேவையான பலம் தங்களிடம் இருப்பதாக பா.ஜனதா தெரிவித்தது.

    இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றுள்ளது.

    அரியானா சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றது.

    இதன்மூலம், நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த நயாப் சைனி நேற்று பதவி ஏற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×