search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு
    X

    மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு

    • பிரதமர் மோடி எழுந்து சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா பெயரை முன்மொழிந்தார்.
    • ஓம்பிர்லாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறி அவர் வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் மகதாப் அறிவித்தார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முதலாக கடந்த திங்கட்கிழமை பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.

    நேற்றும், நேற்று முன்தினமும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் 26-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பாராளுமன்ற சபாநாயகரை பெரும்பாலும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்வார்கள். ஆனால் தற்போது எதிர்க் கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பாராளுமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது.

    சபாநாயகரை போட்டியின்றி தேர்வு செய்வதற்காக கடந்த 2 நாட்களாக மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தருவதாக இருந்தால் சபாநாயகரை ஆதரிக்க தயார் என்று காங்கிரஸ் நிபந்தனை விதித்தது.

    இந்த நிபந்தனையை பா.ஜ.க. ஏற்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் பாராளுமன்ற சபாநாயகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதே சமயத்தில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம்பிர்லா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

    நேற்று மதியம் அவர்கள் இருவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதன் மூலம் பாராளுமன்றத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே முதல் பலப்பரீட்சை உருவானது.

    இதற்கிடையே இன்று காலை சபாநாயகரை ஏக மனதாக தேர்வு செய்ய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கடைசி நேர முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று பகல் 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகர் தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகள் தொடங்கியது.

    தற்காலிக சபாநாயகர் மகதாப் சபாநாயகர் தேர்தலை நடத்தினார். இதையடுத்து பிரதமர் மோடி எழுந்து சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா பெயரை முன்மொழிந்தார். மத்திய மந்திரிகள் ராஜ் நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி மற்றும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் சிரக்பஸ்வான் உள்பட பலர் வழிமொழிந்தனர்.

    இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை காங்கிரஸ் எம்.பி. பிரேமசந்திரன் முன்மொழிந்தார். அகிலேஷ் யாதவ், கனிமொழி, சுப்ரியா சுலே உள்பட இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வழிமொழிந்தனர்.

    அதன்பிறகு 11.13 மணிக்கு சபாநாயகர் தேர்தல் நடத்தப்பட்டது. டிவிசன் வாரியாக ஓட்டெடுப்பு நடத்தப்படலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் எம்.பி.க்களுக்கு உரிய இருக்கை ஒதுக்கப்படாததால் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓட்டெடுப்பை நடத்த தற்காலிக சபாநாயகர் மகதாப் முடிவு செய்தார்.

    அதன்படி ஓம்பிர்லாவை ஆதரிப்பவர்கள் குரல் கொடுக்கலாம் என்று அவர் அறிவித்தார். அடுத்த வினாடி பா.ஜ.க. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் மிக பலத்த சத்தத்துடன் ஓம்பிர்லாவை ஆமோதித்து குரல் எழுப்பினார்கள். அதன் பிறகு எதிர்ப்பவர்கள் குரல் கொடுக்கலாம் என்று தற்காலிக சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.

    அப்போது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நோ என்று குரல் எழுப்பினார்கள். இதையடுத்து ஓம்பிர்லாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறி அவர் வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் மகதாப் அறிவித்தார். இதன் மூலம் புதிய சபாநாயகராக ஓம்பிர்லா தேர்வானார்.

    அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடியும், ராகுலும் புன்னகைத்தபடி கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். அதன் பிறகு புதிய சபாநாயகர் பதவி ஏற்பு வைபவம் நடைபெற்றது.

    ஓம்பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பாரம்பரிய முறைபடி அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அமர்ந்திருந்த தற்காலிக சபாநாயகர் மகதாப் எழுந்து நின்று வணங்கி ஓம்பிர்லாவை வரவேற்று கை குலுக்கினார்.

    பிறகு அவர் தனது இருக்கையை விட்டு விலகி நிற்க ஓம்பிர்லா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தேர்வுக்கு ஒத்துழைப்பு தெரிவித்த அனைவருக்கும் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×