search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தனது காலடி மண்ணை எடுக்குமாறு போலே பாபா அழைத்தார் - ஹத்ராஸ் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி
    X

    'தனது காலடி மண்ணை எடுக்குமாறு போலே பாபா அழைத்தார்' - ஹத்ராஸ் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி

    • ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

    80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் போலே பாபா மீது வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

    ஹத்ராஸில் 121 பேரை பலிகொண்ட ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு பிறகு போலே பாபா தலைமறைவாக இருந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இரங்கல் வீடியோ வெளியிட்டிருந்தார்.

    அந்த இரங்கல் வீடியோவில், இந்த நிகழ்வால் நான் மிகவும் வருத்தமடைந்தேன், இந்த வலியை தாங்குவதற்கான சக்தியை கடவுள் நமக்கு தரட்டும். அரசாங்கத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். இந்த அசம்பாவிதத்துக்கு காரணமானவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று நான் நம்புகிறேன். எனது வழக்கறிஞர் மூலம் கமிட்டி நிர்வாகிகளை தொடர்புகொண்டு படுகாயமடைந்த உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பக்கத்துணையாக நிற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று பேசியுள்ளார்.

    இந்நிலையில், ஹத்ராஸ் கூட்டநெரிசலை நேரில் பார்த்த சுதிர் பிரதாப் சிங் என்பவர் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

    "ஹத்ராஸ் ஆன்மிக கூட்டத்தில், தனது காலடி மண்ணை எல்லோரும் எடுத்துக் கொள்ளுமாறு போலே பாபா அழைத்தார். அதன்பின் கூட்டத்தில் அனைவரும் அந்த மண்ணை எடுக்க முண்டியடித்துச் செல்ல, ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதுவே பலரின் உயிரிழப்புக்குக் காரணம். கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் போலே பாபா அங்கிருந்து சென்று விட்டார். உள்ளூர் மக்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர்" என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, "ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல. சமூக விரோதிகளின் சதி செயல்" என போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

    Next Story
    ×