search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த சர்ச்சையில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்.. மகனின் கான்வாய் இடித்து 2 பேர் பலி
    X

    அடுத்த சர்ச்சையில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்.. மகனின் கான்வாய் இடித்து 2 பேர் பலி

    • உத்தரப் பிரதேச மாநிலம் கைஸர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கரண் பூஷன் சிங் போட்டியிடுகிறார்.
    • கரண் பூசன் சிங்கிற்கு சொந்தமான கான்வாய் SUV கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

    பாஜக எம்.பியும் இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூசன் சிங் மீது இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகிய நிலையில், பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் நடப்பு மக்களவைத் தேர்தலில் அவருக்கு எம்.பி சீட் வழங்காமல் அவரது மகன் கரண் பூஷன் சிங்கிற்கு பாஜக, எம்.பி சீட் வழங்கியது.அதன்படி உத்தரப் பிரதேச மாநிலம் கைஸர்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக கரண் பூஷன் சிங் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் உத்தரப் பிரதேசம் கோண்டா மாவட்டம் கர்னைல்கஞ்ச் பகுதியில் சென்றுகொண்டிருந்தகரண் பூசன் சிங்கிற்கு சொந்தமான கான்வாய் SUV கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஹோசூர்பூர் சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார் மோதியதில் பைக்கில் வந்துகொண்டிருந்த 17 வயது சிறுவனும், 24 வயது இளைஞனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கட்டுப்பாட்டை இழந்த கார் மின் கம்பத்தில் மீது மோதி வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 60 வயது மூதாட்டி மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரில் கரண் பூசன் சிங் இருந்தாரா என்ற தகவல் வெளியாகவில்லை. உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    Next Story
    ×