என் மலர்
இந்தியா

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு நிர்மலா சீதாராமன் ஆவேச பதிலடி
- பல்வேறு மாநிலங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
- நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று எதிர்கட்சி தலைவர் கூறியது கண்டனத்துக்குரியது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்றத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க 'இந்தியா'கூட்டணி முதலமைச்சர்கள் முடிவு செய்தனர்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியா கூட்டணி தலைவர்கள் தீர்மானித்தபடி இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டனர். பட்ஜெட்டை கண்டித்து அவர்கள் பாராளுமன்றம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை கண்டித்து எழுதப்பட்ட பதாகைகளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஏந்தி இருந்தனர். பா.ஜ.க. அரசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக எம்.பி.க்கள் முழுமையாக பங்கேற்றனர். பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.
11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் சபைக்குள் சென்றனர்.
மேல்சபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியதும் பட்ஜெட்டை கண்டித்து எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாக எதிர்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள். எதிர்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:-
பல்வேறு மாநிலங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பல மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றும் வகையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறி மத்திய அரசை குற்றம் சாட்டினார்.
இதற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து பேச முயன்றார். அப்போது எதிர்கட்சி எம்.பி.க்கள் பட்ஜெட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அவர்கள் கோஷங்களை எழுப்பி வெளியேறினார்கள்.
அப்போது மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்க வில்லை. மாநிலங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை என்றால் அது புறக்கணிப்பு என்று ஆகிவிடாது. நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று எதிர்கட்சி தலைவர் கூறியது கண்டனத்துக்குரியது.
திட்டமிட்டே எதிர்கட்சிகள் மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.
இந்த நாட்டில் காங்கிரஸ் கட்சி மிக நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தது. அவர்கள் பல்வேறு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் மாநிலங்கள் பெயர்களை குறிப்பிடுவது இல்லை. இது அவர்களுக்கு தெளிவாக தெரியும்.
பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுவது துரதிருஷ்டவசமானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வடகான் துறைமுகம் அமைக்க மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட்டில் மகாராஷ்டிரத்தின் பெயரை குறிப்பிடவில்லை. அதற்காக மகாராஷ்டிரா மாநிலம் புறக்கணிக்கப்பட்டது என்று அர்த்தமா? நமது மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் திட்டமிட்ட முயற்சி இதுவாகும். இந்த குற்றச்சாட்டு மூர்க்கத்தனமானது.
நான் பேசும் போது ஜனநாயகத்தின் கவுரவத்திற்காக எதிர்கட்சிகள் இங்கே இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
அப்போது உள்ளே வந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் போட்டனர். நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டே இருக்கும் போதே எதிர்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.
எதிர்கட்சி உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு அவை தலைவர் ஜெகதீப் தன்கர் வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறும்போது பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கான நேரத்தை அதிகரிக்க தயார் என்றார்.
பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். இந்தியா கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் இருக்கை முன் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பினார்கள்.
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டதாக கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். அவை சுமூகமாக நடைபெற எதிர்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜி ஜூ கோரிக்கை வைத்தார்.
லிங்கை கிளிக் செய்யவும்- மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு 2.62 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு






