search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆட்டோ மீது ஐயப்ப பக்தர்கள் சென்ற பஸ் மோதி 5 பேர் பலி
    X

    ஆட்டோ மீது ஐயப்ப பக்தர்கள் சென்ற பஸ் மோதி 5 பேர் பலி

    • பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை அப்துல் மஜித்(வயது55) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவர்களது ஆட்டோ செட்டியங்காடு என்ற பகுதியில் சென்ற போது, எதிரே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    ஆட்டோவில் இருந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆட்டோவில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர்.

    பின்பு படுகாயம் அடைந்தவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த ஐயப்ப பக்தர்கள் யாரும் காயம் அடையவில்லை. சாலை திருப்பத்தில் பஸ் வேகமாக திரும்பிய போது தவறுதலாக ஆட்டோ மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. பலியான ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித் தனது மகளுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மகள் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதே போல் விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது புல்லூரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற போது தனது 2 குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் பலியாகிவிட்டார்.

    இந்த விபத்து பலியானவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×