என் மலர்
இந்தியா

தலைமை தேர்தல் ஆணையர் நாளை நியமிக்கப்படுவாரா?- உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் காங்கிரஸ் எதிர்ப்பு

- தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
- புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இருந்து வருகிறர். இவர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட வேண்டும். வழக்கமாக அவருக்கு அடுத்தப்படியாக உள்ளவர் தலைமை தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்படுவார். 3-வது நபரை பிரதமர் தலைமையிலான குழு தேர்வு செய்யும்.
பிரதமர் தலைமையிலான குழுவில் பிரதமர், கேபினட் அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இருப்பார்கள். அந்த வகையில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 22-ந்தேதி இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. அதுவரை இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தக்கூடாது என ராகுல் காந்தி தனக்கு இந்த கூட்டம் தொடர்பாக கருத்து வேறுபாடு இருப்பதாக கடிதம் கொடுத்துள்ளார்.
ஆனால், தேர்தல் ஆணையத் தலைவர் பதவி காலியிடமாக இருக்கும் என்பதால் தேர்வு செய்யப்படுவதை மத்திய அரசு தள்ளிப்போட விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றம் நியமனத்திற்கு தடை விதிக்கவில்லை. மேலும், சட்டப்பூர்வ கருத்து கோரப்பட்டு வழங்கப்பட்டது, பிரதமர் தலைமையிலான குழு தொடர்ந்து செயல்படுமாறு கூறப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான கோப்பிலும், புதிய அதிகாரியை நியமிப்பதற்கான கோப்பிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் கூறுகையில் "தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் நியமிப்பது தொடர்பான விவகாரத்தை உச்சநீதிமன்றம் வருகிற 22-ந்தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் நாங்கள் ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைக்க விரும்புகிறோம். காங்கிரஸ் கட்சியுடன் சட்டக்குழு இதை ஆதரிக்கிறது. நாம் ஈகோவில் செயல்பட முடியாது, மேலும் உச்ச நீதிமன்றம் முன்கூட்டியே முடிவெடுக்கும் வகையில் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தேர்தல் ஆணையத்தை தன்னுடன் கட்டுப்பாட்டில் வைக்க விரும்புகிறது. அதனுடைய நம்பகத்தன்யை குறித்து கவலைப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளது.
வழக்கமாக பிரதமரின் ஆலோசனைப்படி தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் தேர்வு செய்யப்படுவார். தலைமை தேர்தல் ஆணையருக்கு கீழ் உள்ள மற்ற இரண்டுபேரில் சீனியர் அடிப்படையில் மூத்த ஆணையர் தலைமை ஆணையராக தேர்வு செய்யப்படுவார். அதன்படி ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
சட்ட அமைச்சர் ஐந்து பேர் கொண்ட பட்டியலை தயார் செய்து தேர்வுக்குழுவிற்கு அனுப்புவார். தேர்தல் குழுவில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர், கேபினட் அமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பார்கள்.
ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பதிலாக கேபினட் அமைச்சர் குழுவில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.