search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாட்டையே உலுக்கிய வீடியோ.. மணிப்பூர் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு பரிந்துரை
    X

    நாட்டையே உலுக்கிய வீடியோ.. மணிப்பூர் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு பரிந்துரை

    • பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    • வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. கிட்டத்தட்ட மூன்று மாத காலம் நீடித்த இந்த வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உயிருக்குப் பயந்து ஏராளமானோர் ஊரை காலி செய்து வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

    இந்த வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக இரண்டு பெண்களை ஆடையின்றி மானபங்கம் செய்தபடி ஊருக்குள் இழுத்து வந்தது தொடர்பான வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

    இந்நிலையில், மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும், வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். அநேகமாக அண்டை மாநிலமான அசாமில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    மைதேயி மற்றும் குகி ஆகிய இரு சமூக குழுக்களுடனும் மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், மணிப்பூரில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×