search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது
    X

    சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது

    • விண்கலம் இப்போது 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
    • ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும்.

    சென்னை:

    நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும்.

    இதன் முதல் கட்டமாக 15ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 173 கி.மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 41,762 கி.மீட்டர் தொலைம் கொண்ட சுற்றுப்பாதையில் சீரான வேகத்தில் புவியை வலம் வந்தது.

    இந்நிலையில், இரண்டாவது முறையாக இன்று விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. இரண்டாவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், விண்கலம் இப்போது 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பாதையானது நாளை மேலும் உயர்த்தப்படுகிறது. நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பிறகு நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும், அதன் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு வட்ட சுற்றுப்பாதையை அடையும். குறிப்பட்ட வட்டப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    Next Story
    ×