search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    குற்றவாளிகளுக்கு உடந்தை.. பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசின் மனுவை  நிராகரித்த உச்சநீதிமன்றம்
    X

    குற்றவாளிகளுக்கு உடந்தை.. பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்

    • குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
    • குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது.

    ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்ட்டிருந்தது

    இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் பூயன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தின் கருத்தில் எந்த தவறும் இல்லை. அதை நீக்கக்கோரும் இந்த மனுவில் எந்த தகுதியும் முகாந்திரமும் இல்லை, இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×