search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    4 மாநிலங்களில் காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை- தேசிய அளவில் 16 சதவீதமாக வீழ்ச்சி
    X

    4 மாநிலங்களில் காங்கிரசுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை- தேசிய அளவில் 16 சதவீதமாக வீழ்ச்சி

    • காங்கிரஸ் முதல்முறையாக இடதுசாரியுடன் இணைந்து திரிபுராவில் போட்டியிட்டும் அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க முடியவில்லை.
    • 2014-ல் பிரதமராக மோடி வருவதற்கு முன் 24 சதவீத எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசிடம் இருந்தனர்.

    புதுடெல்லி:

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் தேசிய கட்சியான காங்கிரசுக்கு ஏமாற்றமே ஏற்பட்டு உள்ளது.

    இந்த 3 மாநிலங்களில் 180 தொகுதிகள் உள்ளன. ஆனால் இதில் காங்கிரசுக்கு 8 இடம் மட்டுமே கிடைத்து உள்ளது. திரிபுராவில் 3-ம், மேகாலயாவில் 5-ம் பெற்றது. நாகாலாந்தில் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.

    டெல்லி, சிக்கிம், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் மேற்கு வங்க இடைத்தேர்தலில் காங்கிரசின் வெற்றியால் பூஜ்ஜிய பட்டியலில் இருந்து அம்மாநிலம் தப்பியது. எனினும் இப்பட்டியலில் புதிதாக நாகாலாந்து சேர்ந்துவிட்டது.

    பல மாநிலங்களில் காங்கிரசுக்கு சொற்ப எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். 403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில் காங்கிர சுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். 9 மாநிலங்களில் காங்கிரசுக்கு 10-க்கும் குறைவான எம்.எல்.ஏ.க்களே உள்ளனர்.

    பீகாரில் 19, தமிழ்நாட்டில் 18 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளனர். இந்த எண்ணிக்கை அக்கட்சிக்கானதா என்பதில் உறுதி இல்லை. ஏனெனில் கூட்டணி பலத்தில் வெற்றி பெற்றதாக சொல்கிறார்கள்.

    மற்றொரு புள்ளி விவரப்படி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் 4,033 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் சுமார் 16 சதவீதம் (658 எம்.எல்.ஏ.க் கள்) மட்டுமே காங்கிரசுக்கு உள்ளனர். 2014-ல் பிரதமராக மோடி வருவதற்கு முன் 24 சதவீத எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசிடம் இருந்தனர்.

    காங்கிரஸ் முதல்முறையாக இடதுசாரியுடன் இணைந்து திரிபுராவில் போட்டியிட்டும் அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க முடியவில்லை.

    அடுத்து விரைவில் கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைப்பதுடன் மற்ற மாநிலங்களையும் கைப்பற்றினால் மட்டுமே காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள்.

    அப்போதுதான் அதன் பலன் காங்கிரசுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும் எனக் கருதப்படு கிறது. இந்த சவால்களை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், முக்கிய தலைவரான ராகுலும் சவாலாக ஏற்று களம் இறங்குவார்களா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

    Next Story
    ×