search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்
    X

    (கோப்பு படம்)

    டெல்லியில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

    • காணொலி மூலம் சோனியா காந்தி தலைமை தாங்குகிறார்.
    • கட்சித் தலைவர் தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்த பரபரப்பான சூழலில் நாளை மாலை காங்கிரஸ் தேசிய காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார் என்ற விபரம் வெளியாகாத நிலையில், அங்கிருந்தபடி காணொலி மூலம் கூட்டத்திற்கு அவர் தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது. சோனியாகாந்தியுடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் சென்றுள்ள நிலையில் அவர்களும் நாளைய கூட்டத்தில் காணொலி மூலம் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள் என தெரிகிறது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று அந்த கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக உள்ள நிலையில், நாளை நடைபெறும் தேசிய காரிய கமிட்டி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×