என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்திய 4½ லட்சம் வங்கிக் கணக்குகள் முடக்கம்
- மோசடி, தரவு திருட்டு, கணினி முடக்கம், ஆபாச அத்துமீறல் என இந்த குற்றங்களின் பட்டியல் நீளுகிறது.
- அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:
நவீன உலகில் தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் செல்கிறது.
அடுத்தடுத்து வெளி வரும் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்பங்களும் மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கி வரமாக மாறினாலும், மறுபுறம் பல்வேறு தீமைகளை விளைவித்து சாபமாகவும் அமைந்து விடுகிறது.
உலகம் முழுவதும் நாள்தோறும் பதிவாகும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையே இதற்கு சாட்சி.
எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இணையம் மற்றும் டிஜிட்டல் கருவிகள் மூலம் மர்ம நபர்கள் பெரும் குற்ற செயலில் ஈடுபட்டு சேதங்களை விளைவிக்கின்றனர்.
மோசடி, தரவு திருட்டு, கணினி முடக்கம், ஆபாச அத்துமீறல் என இந்த குற்றங்களின் பட்டியல் நீளுகிறது.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் சுமார் 1 லட்சம் சைபர் குற்றங்கள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில் பெரும்பாலும் அடுத்தவரின் பணப்பையை குறி வைத்து நடக்கும் நிதி மோசடிகளே பரவலாக நடந்து வருகின்றன. அந்தவகையில் இந்த குற்றங்கள் மூலம் ஒரே ஆண்டில் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு உள்ளது.
விசாரணை அமைப்புகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்த சைபர் கிரைம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக்கணக்குகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். குறிப்பாக இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மையம் (14சி) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதன்படி, ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்படும் பணத்தை கையாளுவதற்கு என பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் லட்சக்கணக்கான கணக்குகளை இந்த மோசடிதாரர்கள் வைத்து இருப்பது தெரியவந்தது.
இந்த வங்கிக்கணக்குகள் பெரும்பாலும் மற்றொருவரின் ஆவணங்கள் மூலம் தொடங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்த கணக்குகளில் இருந்து காசோலை, ஏ.டி.எம். மற்றும் டிஜிட்டல் முறையில் பணத்தை மோசடிதாரர்கள் வெளியே எடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மேற்படி வங்கிக்கணக்குகள் பற்றிய விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள் அறிக்கையாக வழங்கினர்.
அத்துடன் பிரதமர் அலுவலகத்துக்கும் சமீபத்தில் வழங்கினர். அப்போது சுமார் 3 மணி நேரம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இத்தகைய வங்கிக்கணக்குகளை கையாளுவதில் வங்கித்துறையின் குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக இந்த கணக்குகளை தொடங்கியதில் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்க அறிவுறுத்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்புக்குழு மைய அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகத்தை கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த வங்கிக் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச போலீசாருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 4½ லட்சம் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.
இதில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10 ஆயிரம் கணக்குகள், கனரா வங்கியில் 7 ஆயிரம், கோடக் மகேந்திரா வங்கியில் 6 ஆயிரம், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியில் 5 ஆயிரம் கணக்குகளும் அடங்கும்.
இவ்வாறு ஆன்லைன் மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது இந்திய வங்கித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்