என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![மன அழுத்தம் ஏற்பட்டால் பெற்றோரிடம் பேசுங்கள்- மாணவர்களுக்கு தீபிகா படுகோன் அறிவுரை மன அழுத்தம் ஏற்பட்டால் பெற்றோரிடம் பேசுங்கள்- மாணவர்களுக்கு தீபிகா படுகோன் அறிவுரை](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9255003-deepikapadukone.webp)
மன அழுத்தம் ஏற்பட்டால் பெற்றோரிடம் பேசுங்கள்- மாணவர்களுக்கு தீபிகா படுகோன் அறிவுரை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.
- மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் யாருக்கும், எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
புதுடெல்லி:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி ஆண்டுதோறும் கலந்துரையாடி வருகிறார். அந்த வரிசையில் இந்த ஆண்டும் கடந்த 10-ந்தேதி மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அதேநேரம் இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. அதன்படி உள்ளரங்கில் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியை இந்த ஆண்டு பூங்கா ஒன்றில் பிரதமர் மோடி நடத்தினார்.
இதைப்போல, பிரதமர் மோடி மட்டுமே மாணவர்களுடன் கலந்துரையாடி வந்த நிலையில், இந்த முறை பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் மாணவர்களுடன் கலந்துரையாடி தங்கள் அனுபவங்களை அவர்களுடன் பகிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்தவகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியதுடன், தனது சிறுவயது போராட்டங்கள் மற்றும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
நேற்று ஒளிபரப்பப்பட்ட இந்த கலந்துரையாடலில் தீபிகா படுகோன் மாணவர்களிடம் கூறியதாவது:-
போட்டிகளும், ஒப்பிடுதலும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைக்கிறேன். போட்டி ஒன்றும் மோசமானது கிடையாது. மாறாக நமது பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொண்டு பலத்தை அதிகரிக்கவும், பலவீனத்தை மாற்றவும் உதவுகிறது.
எனவே போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சியுங்கள். அவர்களை விட வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.
மன அழுத்தம் கண்ணுக்கு புலப்படாது. ஒரு காலத்தில் நான் ஓய்வின்றி உழைத்துக்கொண்டு இருந்தேன். 2014-ம் ஆண்டு ஒரு நாள் மயங்கி விழுந்து விட்டேன். அப்போது பெங்களூருவில் இருந்து என்னை பார்ப்பதற்காக மும்பை வந்த எனது அம்மா, நான் சரியாக இல்லை என்பதை உணர்ந்து விட்டார்.
எனக்கு எதாவது நடந்ததா? என அவர் கேட்டார். ஆனால் நான், 'அப்படி எதுவும் இல்லை, அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் முற்றிலும் ஆதரவற்றவளாகவும், நம்பிக்கையற்றவளாகவும் உணர்கிறேன். எனக்கு இனி வாழ விருப்பமில்லை' எனக்கூறினேன். அப்போது எனது நிலையை உணர்ந்து கொண்ட என் அம்மா ஒரு மனநல மருத்துவரை அழைக்க முடிவு செய்தார். அப்போது நான் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன்.
மனநலம் என்பது நம் நாட்டில் ஒரு களங்கமாக இருந்தது. இந்த நோயைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், நான் மிகவும் சுதந்திரமாகவும், லேசாகவும் உணர ஆரம்பித்தேன். அங்கிருந்து, மனநல விழிப்புணர்வை நோக்கிய எனது பயணம் தொடங்கியது. மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் யாருக்கும், எந்த நேரத்திலும் ஏற்படலாம்.
எனவே உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் தேர்வுக்கு முன்தினம் இரவு உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். உங்கள் மன அழுத்தத்துக்கான காரணத்தை கண்டறியுங்கள். அதை நம்பிக்கையான ஒருவரிடம் தெரிவியுங்கள்.
பிரதமர் மோடிஜி தனது 'தேர்வு வீரர்கள்' புத்தகத்தில் கூறியிருப்பது போல, நீங்கள் தேர்வுக்காக தயாராகும்போது சிறப்பாக உணரத்தொடங்குவீர்கள். ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.
தூக்கம் மிகவும் முக்கியமானது. அது இலவசமாகக் கிடைக்கும் ஒரு வலிமை. வெளியே சென்று போதுமான சூரிய ஒளி மற்றும் புதிய காற்றை பெற வேண்டும்.
திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை நான் ஒரு குறிப்பிட்ட முறையில் செய்திருந்தால், அடுத்த முறை நான் அதை எப்படி வித்தியாசமாகச் செய்வது, சிறப்பாக செய்வது என திட்டமிடுவேன். அதைப்போல நீங்களும் உங்களுக்கு சவால் விட்டு செயல்படுங்கள்.
இவ்வாறு நடிகை தீபிகா படுகோன் கூறினார்.
மேலும் தனக்கு இந்த வாய்ப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி கூறினார்.