search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயார்- பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங்
    X

    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங்

    சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயார்- பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங்

    • ஐ.என்.எஸ். மொர்முகோவ் போர்க்கப்பல் கடற்படையில் இணைந்தது.
    • இந்த கப்பலில் உள்ள உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை.

    மும்பைக் கடற்படைத் தளத்தில் இன்று மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.என்.எஸ். மொர்முகோவ் என்ற போர்க்கப்பல், இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள 2-வது போர் கப்பல் என்ற பெருமையை அது பெற்றது.


    விழாவில் பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: இந்தக் கப்பல் இந்தியக் கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதுடன், கடல் பாதுகாப்பை உறுதி செய்யும். தொழில்நுட்ப ரீதியிலான அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் வல்லமை கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட உபகரணங்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டவை. இந்திய ராணுவம் தற்சார்பு நிலையை அடைவதற்கு இது உதாரணம்.


    இந்தியக் கடற்படை, கடல்சார் பாதுகாப்பைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், சமூக, பொருளாதார வளர்ச்சியிலும் பங்காற்றுகிறது. இந்திய கடல் பிராந்தியத்தைப் பாதுகாப்பதே, இந்தியக் கடற்படையின் முக்கிய இலக்கு. இந்திய பொருளாதார வளர்ச்சி கடல் மார்க்கமாக அதிகரிக்கும் வர்த்தகத்தைச் சார்ந்தே இருக்கிறது.

    எல்லைப்பகுதிகளையும், கடலோரப் பகுதிகளையும் பாதுகாக்கும் ஆயுதப்படையினர், தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடியப் பங்களிப்பின் மூலம், இந்தியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கிறது. ராணுவத்தில் பெரும்பாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×