search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    36 வருட பகை... பட்டப்பகலில் வக்கீல் படுகொலை... டெல்லி பார் அசோசியேசன் போராட்ட அறிவிப்பு
    X

    36 வருட பகை... பட்டப்பகலில் வக்கீல் படுகொலை... டெல்லி பார் அசோசியேசன் போராட்ட அறிவிப்பு

    • வழக்கறிஞருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு கொரோனா காலகட்டத்தில் திரும்ப பெறப்பட்டது.
    • கொலையாளிகள் நரேஷ் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி துவாரகா பகுதியில் வழக்கறிஞர் வீரேந்தர் குமார் நர்வால் நேற்று பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பைக்கில் வந்த இரண்டு நபர்கள் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் நரேஷ் மற்றும் பிரதீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

    36 வருட பகை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாகவும், பிரதீப்புக்கும் வழக்கறிஞர் வீரேந்தர் குமாருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர் வீரேந்தர் குமாரின் தாத்தா, பிரதீப்பின் மாமாவை 1987ல் கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரதீப்பிற்கு கிடைக்கவேண்டிய இழப்பீடுகளில் வீரேந்தர் குமார் சில சட்ட தடங்கல்களை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு பிரதீப் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே விரோதம் மேலும் வளர்ந்துள்ளது.

    2017ம் ஆண்டு வழக்கறிஞர் வீரேந்தர் குமாரை பிரதீப் கொல்ல முயன்றுள்ளார். ஆனால் அப்போதைய தாக்குதலில் வழக்கறிஞர் உயிர்தப்பினார். அவரது டிரைவர் காயமடைந்தார். அதன்பின்னர் வழக்கறிஞருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது.

    பட்டப்பகலில் அவர் கொல்லப்பட்டதால் சக வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கறிஞர் கொலைக்கு நீதி கேட்டு, நாளை அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் விசாரணைகளுக்கு ஆஜராகாமல் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்த டெல்லி பார் அசோசியேசன் அழைப்பு விடுத்துள்ளது. வழக்கறிஞர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் வடக்கு டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

    Next Story
    ×