search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிபிஐ கைதை எதிர்த்து கெஜ்ரிவால் மனு: உத்தரவை ஒத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
    X

    சிபிஐ கைதை எதிர்த்து கெஜ்ரிவால் மனு: உத்தரவை ஒத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்

    • சிபிஐ கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல்.
    • இடைக்கால ஜாமின் கேட்டும் மனுதாக்கல் செய்திருந்தார்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையைத் தொடர்ந்து சிபிஐ-யும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.

    சிபிஐ கைது செய்ததுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. தன்னை சிபிஐ கைது செய்தது, காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டதையும் எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அத்துடன் இடைக்கால ஜாமின் வழங்கக்கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

    சிபிஐ கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது. அதேபோல் இடைக்கால ஜாமின் கேட்க மனு மீதான உத்தரவையும் ஒத்திவைத்துள்ளது.

    இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.பி சிங் "மக்களவை தேர்தலுக்காக மட்டும் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் 21 நாள் இடைக்கால ஜாமினை அவருடைய வசதிக்காக பயன்படுத்த முடியாது. அது தேர்தலுக்காக மட்டுமே வழங்கப்பட்டது.

    பணமோசடி வழக்கில் ஜூன் 20-ந்தேதி விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினையும் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், டெல்லி உயர்நீதிமன்றம் அந்த ஜாமினுக்கு தடை வழங்கியதுடன், அதற்கான 30 பக்க அளவிலான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

    வெறுமென சந்தேகம் இருந்தால் கூட தனி நபரை கைது செய்ய சிபிஐ-க்கு அதிகாரம் உள்ளது. முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ய அந்த நேரத்தில் சிபிஐ-யிடம் போதுமான காரணம் இருந்தது. சிஆர்பிசி (CrPC) விசாரணைக்கான கைது செய்ய அனுமதி வழங்குகிறது.

    கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானதால் அவரைக் கைது செய்வது அவசியமானது. சிபிஐ விசாரணையை முடிப்பதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது. மேலும் அவர் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் மீது முதல்வர் செல்வாக்கு செலுத்துவார் என்ற நியாயமான அச்சம் உள்ளது. மேலும் ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில்தான் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும்" என வாதிட்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்காக ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி "டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலின் ஜாமின் மனுவை ஏன் கேட்கக் கூடாது என்பதற்கான காரணத்தை சிபிஐ கொடுக்கவில்லை. சிபிஐ-யின் நிலை தாமதப்படுத்தும் தந்திரம்.

    கெஜ்ரிவால் மீதான சமீபத்திய புதிய ஆதாரம் ஜனவரி 2024 ஆகும். ஜனவரி 2024-க்குப் பிறகு சிபிஐ புதிய ஆதாரத்தை பெறவில்லை. தற்போது சிபிஐ ஜூன் 13-ந்தேதி புதிய ஆவணங்களுடன் வந்துள்ளது. இது எங்கும் பயன்படாது. கைதுக்கு பிந்தைய ஆவணங்கள் கொடுக்க முடியுமா?.

    நீங்கள் 41A நோட்டீஸ் கொடுத்தபோது அதை நீங்கள் சமர்பிக்கவில்லை. அது எங்கே இருக்கிறது? வாய்மொழியாக மட்டும் சொல்ல முடியாது. முழு விசயத்தின் அடிப்படையில், கெஜ்ரிவாலின் கைதுக்கு நியாயப்படுத்த புதிதாக எதுவும் இல்லை" என வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் உத்தரவை ஒத்திவைத்துள்ளது.

    Next Story
    ×