search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமிக்க டெல்லி துணை நிலை கவர்னருக்கே அதிகாரம்: மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு
    X

    மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமிக்க டெல்லி துணை நிலை கவர்னருக்கே அதிகாரம்: மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு

    • டெல்லி அரசின் மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்.
    • ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அரசுக்கும் துணைநிலை கவர்னருக்கும் இடையே அதிகாரம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.

    இதற்கிடையே டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா, டெல்லி முனிசிபல் மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமனம் செய்து வந்தார்.

    மேலும் டெல்லி அரசின் மந்திரி சபையின் எந்தவித அனுமதியையும் கேட்காமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

    இதையடுத்து கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதேப்போன்று மத்திய அரசு தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு, அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு மே மாதம் ஒத்திவைத்தார்.

    இந்தநிலையில் மேற் கண்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இன்று வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது:-

    இந்த வழக்கை பொருத்த மட்டில் அமைச்சர் குழுவின் ஆலோசனைக்கு கவர்னர் கட்டுப்படுகிறாரா என்ற கேள்வியின் கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 1993-ம் ஆண்டு அரசியலமைப்பு மாற்றங்களை உள்ளடக்கிய திருத்தத்தின் மூலம் உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் துணை நிலை கவர்னருக்கு வழங்கப்படுகிறது.

    இதனை அடிப்படையாக கொண்டு பார்த்தால் டெல்லி அரசு அல்லது அமைச்சரவை குழு ஆகியவற்றின் ஆலோசனைகளையோ அல்லது கருத்துக்களையோ துணை நிலை கவர்னர் கட்டாயம் கேட்க வேண்டும் என்பது கிடையாது. அவர் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க அதிகாரம் உண்டு.

    இதனை ஏற்கனவே செய்யப்பட்ட சட்ட திருத்தம் என்பது தெளிவாக கூறுகிறது.

    இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு டெல்லி அரசின் மனுவை நிராகரித்தது.

    சுப்ரீம் கோர்ட்டு இந்த உத்தரவின் மூலம் டெல்லி மாநகராட்சிக்கு உறுப்பினர்களை நியமிக்க துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உண்டு என்பது உறுதியாகி உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். அவர்களுக்கான அதிகாரமும் பறிபோய் விட்டது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    Next Story
    ×