search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆம் ஆத்மி, பா.ஜ.க.வினர் அமளி - டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
    X

    டெல்லி மாநகராட்சி கூட்டம்

    ஆம் ஆத்மி, பா.ஜ.க.வினர் அமளி - டெல்லி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

    • டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
    • ஆம் ஆத்மி, பா.ஜ.க.வினர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    250 இடங்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த மாதம் 4-ம் தேதி தேர்தல் நடந்தது. 7-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க.வோ 104 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்தன.

    டெல்லி மாநகராட்சி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 6-ம் தேதி நடக்க இருந்தது. ஆனால் 10 மூத்த உறுப்பினர்களுக்கு முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அப்போது மேயர் தேர்தல் நடைபெறாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று மீண்டும் நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சபையில் அனைத்துக் கவுன்சிலர்களும், நியமன உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் இருக்கையில் இருந்து எழுந்து, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் இருந்த இடங்களுக்குச் சென்று முழக்கங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து இருதரப்பு கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பா.ஜ.க. கவுன்சிலர் சத்யசர்மா, சபையை ஒத்திவைத்தார்.

    இதையடுத்து மேயர் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியினரும், பா.ஜ.க.வினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.

    Next Story
    ×