search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜே.பி. நட்டா உடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் சந்திப்பு: என்டிஏ தலைவர்கள் நாளை டெல்லியில் ஆலோசனை
    X

    ஜே.பி. நட்டா உடன் அமித் ஷா, ராஜ்நாத் சிங் சந்திப்பு: என்டிஏ தலைவர்கள் நாளை டெல்லியில் ஆலோசனை

    • பா.ஜனதா தனியாக 240 இடங்கள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் ஜே.பி. நட்டா அமித் ஷாவுடன் ஆலோசனை.

    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 295 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    பா.ஜனதா கட்சிக்கு ஆட்சி அமைப்பதற்கான 272 என தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ் பஸ்வான் கட்சி ஆகியவற்றின் ஆதரவு ஆட்சி அமைக்க தேவைப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டா வீட்டிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றுள்ளனர்.

    தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து விரிவான ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பு ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் நாளை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2019 தேர்தலில் பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 240 இடங்களில்தான் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×