search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் குழந்தையின் உடலை பையில் வைத்து பஸ்சில் எடுத்துச்சென்ற தந்தை
    X

    மத்திய பிரதேசத்தில் குழந்தையின் உடலை பையில் வைத்து பஸ்சில் எடுத்துச்சென்ற தந்தை

    • தனியார் பிண ஊர்தியை அமர்த்திக்கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை.
    • இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார்.

    ஜபல்பூர் :

    மத்திய பிரதேச மாநிலம், தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் துர்வே. இவரது மனைவி ஜாம்னி பாய், கடந்த 13-ந் தேதி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பலவீனமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

    அதன்படி பெற்றோர், அந்த குழந்தையை அங்கு எடுத்துச்சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 15-ந் தேதி குழந்தை இறந்து விட்டது. ஆனால் அந்த குழந்தையின் உடலை பெற்றோர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அமரர் ஊர்தி இல்லை என்று கூறி தர மறுத்து இருக்கிறது.

    தனியார் பிண ஊர்தியை அமர்த்திக்கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை. இதையடுத்து குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து, பஸ்சில் எடுத்துச்சென்றுள்ளார்.

    இதை அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் உருக்கமுடன் கூறி உள்ளார்.

    ஆனால், இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "புதிதாக பிறந்துள்ள குழந்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை தொடங்கி உள்ளது. ஆனால் குழந்தையின் நிலைமை மோசமாக இருந்தபோதும், அதன் பெற்றோர் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். எனவே டிஸ்சார்ஜ் செய்த போது குழந்தை உயிருடன்தான் இருந்தது" என தெரிவித்தார்.

    Next Story
    ×