என் மலர்
இந்தியா

100 நாள் வேலை திட்ட நிலுவை தொகை விவகாரம்- தி.மு.க. நோட்டீஸ்
- தி.மு.க. சார்பில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகையை விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
- அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகை விடுவிக்க கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இன்னும் 100 நாள் வேலை பணியாளர்களின் நிலுவை தொகையை மத்திய அரசு தமிழகத்திற்கு விடுவிக்காமல் இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் நிலுவை தொகையை விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், 100 நாள் வேலைத்திட்ட நிலுவைத் தொகை தொடர்பாக மக்களவையில் விவாதிக்கக்கோரி தி.மு.க. நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மக்களவையில் இன்று 100 நாள் வேலைத்திட்ட நிலுவைத் தொகை விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இவ்விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெறும். அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.






