search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
    X

    பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

    • 3 டாக்டர்கள் மற்றும் 3 நர்சுகள் மீது மர்ம கும்பல் தாக்குதல்
    • மெழுகுவர்த்தி ஜோதி ஏந்தி பேரணியாக சென்றனர்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த கற்பழிப்பு கொலை சம்பவத்தை கண்டித்தும், இதற்கு நீதி கேட்டும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் நாடு முழுவதும் பல்வேறு போராட்டம் நடந்தது.

    டாக்டர்கள் ஆஸ்பத்திரி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போராட்டங்கள் கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் சாகூர்தத்தா மருத்துவமனையில் 3 டாக்டர்கள் மற்றும் 3 நர்சுகள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் மீண்டும் டாக்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட பாதுகாப்பை வழங்க அரசு தவறியதாக கூறி மீண்டும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனை, கொல்கத்தா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மெழுகுவர்த்தி ஜோதி ஏந்தி பேரணியாக சென்றனர். மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் அச்சுறுத்தல்களை எதிர் கொள்கின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும்.

    பணியிடங்களில் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பை வழங்குவதில் அரசு தோல்வி அடைந்துள்ளதாக கூறி டாக்டர்கள் பல்வேறு இடங்களில் மெழுகுவர்த்தி ஜோதி ஏந்தி பேரணி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், மருத்துவமனை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு எந்த ஒரு நேர்மறையான நடவடிக்கையையும் எடுக்க தவறினால் இன்று முதல் மீண்டும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    பயிற்சி டாக்டர் கொலை வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் முக்கிய விசாரணைக்கு வர உள்ள நிலையில் டாக்டர்கள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்கியுள்ளது கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×