search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இந்தியாவின் மதச்சார்பின்மை பிடிக்கலையா.. முகவுரையை மாற்ற சுப்ரமணிய சுவாமி வழக்கு - நீதிபதி கேள்வி
    X

    இந்தியாவின் மதச்சார்பின்மை பிடிக்கலையா.. முகவுரையை மாற்ற சுப்ரமணிய சுவாமி வழக்கு - நீதிபதி கேள்வி

    • பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர்.
    • அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது.

    இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள 'மதச்சார்பற்ற' மற்றும் 'சோஷியலிச' என்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் ஆகியோர் இந்த மனுவை அளித்திருந்தனர்.

    இந்நிலையில் இந்த மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலத்தில் 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் இந்திரா காந்தி அரசால் பாராளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தப்படாமல் தன்னிச்சையாக இந்த வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.

    இது செல்லாது. அவ்வாறு செல்லும் என்றால், அடுத்து வரும் அரசுகளும், தங்களுக்கு ஏற்ப முகவுரையை தொடர்ந்து திருத்தம் செய்யும் வாய்ப்பு உள்ளது. முகவுரையை எழுதியபோது, சோஷலிசம் என்ற வார்த்தையை சேர்த்தால், மக்களின் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதாலேயே அதை அம்பேத்கர் சேர்க்கவில்லை. எனவே 42வது சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவித்து, சோஷலிசம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்கி 1949 இல் கொண்டுவரப்பட்ட முகவுரையைத் தொடர உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இதன்பிறகு பேசிய நீதிபதிகள், உங்களுக்கு இந்தியா மதச்சார்பற்று இருப்பது பிடிக்கவில்லையா அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியே மதச்சார்பின்மை. அரசியலமைப்பு முகவுரையில் உள்ள சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய வார்த்தைகளும் மதச்சார்பின்மை என்பதையே குறிக்கின்றன.

    எனவே அதை நீக்க உத்தரவிட விடமுடியாது. அதே நேரம் மனுதாரர் சுட்டிக்காட்டியபடி முகவுரையை சட்டத் திருத்தம் வாயிலாக திருத்தம் செய்ய முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே இந்துத்துவா என்ற வார்த்தையை இந்திய அரசியலமைப்பு என்று பொருள்படும் பாரதிய சம்விதானத்வா என்பதாக மாற்றக்கோரிய மற்றொரு மனுவும் உச்சநீதிமன்றத்தால் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×