search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிலச்சரிவில் சிக்கி மாயமான நீலகிரி மாணவி- ஆஸ்பத்திரியில் கண்ணீருடன் காத்திருக்கும் தந்தை
    X

    நிலச்சரிவில் சிக்கி மாயமான நீலகிரி மாணவி- ஆஸ்பத்திரியில் கண்ணீருடன் காத்திருக்கும் தந்தை

    • சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார்.
    • உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரியை சேர்ந்த மாணவி ஒருவர் மாயமாகி உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

    நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். சாமிதாசின் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    சாமிதாசின் மகள் தனது பாட்டி வீட்டில் தங்கி படிக்க ஆசைப்பட்டார். இதையடுத்து சாமிதாஸ் தனது மகளை, வயநாடு மாவட்டம் சூரல்மலையில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டில் விட்டார்.

    இவரது மாமனார், மாமியார் அங்குள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சாமிதாசின் மகள் சூரல்மலையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சாமிதாசின் மாமனார் குடும்பம் முழுவதும் சிக்கி மாயமானது.


    மீட்பு படைவீரர்கள் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, இந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். ஆனால் சாமிதாசின் மாமனார், மாமியார் மற்றும் சாமிதாசின் மகள் ஆகியோரின் நிலை இதுவரை என்னவென்றே தெரியவில்லை.

    மகள் நிலச்சரிவில் சிக்கிய தகவல் அறிந்ததும் சாமிதாஸ் உடனடியாக தனது உறவினர்கள் சிலருடன் கேரளா விரைந்தார்.

    சூரல்மலை பகுதிக்கு சென்ற அவர், அங்கு தனது மகள் மற்றும் உறவினர்களை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

    மகளின் நிலை என்ன என்பது தெரியாததால், சாமிதாஸ் மிகவும் கவலை அடைந்துள்ளார். தற்போது அவர் மேப்பாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளார்.

    சூரல்மலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் அனைத்தும் மேப்பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    அங்கு ஆஸ்பத்திரியின் நுழைவு வாயிலில் நிற்கும் சாமிதாஸ், ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்படும் உடல்கள் மற்றும், சிகிச்சைக்கு அழைத்து வருபவர்களை ஓடி சென்று அது தனது மகளாக இருக்குமோ என பார்த்து வருகிறார். ஆஸ்பத்திரியில் அவர் அங்கும் மிங்குமாக சென்று வருவது மற்றவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதுவரை அவரது மகள் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாததால் ஆஸ்பத்திரி வாசலில் அவர், கண்ணீர் மல்க தனது மகள் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறார். தனது மகளை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×