என் மலர்
இந்தியா
ஷீஷ் மகால் முதல் மதுபான கொள்கை வரை.. டெல்லியில் ஆம் ஆத்மியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
- 2020 தேர்தலில் பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
- சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது.
டெல்லி தேர்தல்:
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்குக் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. பாஜக 43 இடங்களைக் கைப்பற்றி சுமார் 27 வருடங்கள் கழித்து ஆட்சி அமைக்கிறது.
22 இடங்களை மட்டுமே பெற்று 10 ஆண்டுகளாக தக்கவைத்த ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கோட்டை விட்டது. கடந்த 2020 தேர்தலில் 62 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆதமி ஆட்சி அமைத்தது. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது.
ஆம் ஆத்மி - காங்கிரஸ் பிளவு:
இந்த நம்பிக்கையில் தான் இந்த தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்காமல் ஆம் ஆத்மி தனித்து களம் கண்டது. ஆனால் கடைசியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி பிரிவு பாஜகவுக்கு சாதமாக அமைந்துள்ளது.
பல்வேறு இடங்களில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பாஜகவிடம் ஆம் ஆத்மி தோற்றுள்ளது. காங்கிரஸ் இவ்விடங்களில் வாக்குகளை வெகுவாக பிரித்துள்ளது. காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைந்திருந்தால் ரிசல்ட் மாற அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும்.
புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சுமார் 5000 வாக்கு வித்தியாசத்தில் தொற்றுள்ளார். ஜங்கிபூரா தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 675 வாக்கு வித்தியசாத்தில் தொற்றுள்ளார்.
கட்சியின் தோல்வி என்பதையும் தாண்டி அதன் முக்கிய தலைவர்களே தோற்றுள்ளதற்கு காங்கிரசை தவிர்த்து வேறு காரணிகளும் உண்டு.
ஆம் ஆத்மி மீதான அதிருப்தி:
2015 மற்றும் 2020 தேர்தல்களில் பெரு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டது. மின்சாரம் மற்றும் குடிநீர் சலுகைகள் டெல்லி வாசிகளைப் பெரிதும் கவர்ந்தது.
இதனால் மத்தியில் பாஜக வென்றபோதிலும் டெல்லியைப் பிடிக்கத் திணறியது. ஆனால் காலப்போக்கில், ஆம் ஆத்மியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், காற்றின் தரம் குறைவு, யமுனை நதி மாசுபாடு ஆகியவை டெல்லி மக்களை தொந்தரவு செய்யத் தொடங்கின.
மத்தியில் உள்ள பாஜக அரசு தடைகளை உருவாக்குவதாக ஆளும் ஆம் ஆத்மி கட்சி கூறியது. ஆனால் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆன நிலையில், வாக்காளர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைச் சாக்குப்போக்காகக் கருதினர். ஆம் ஆத்மி வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசுடன் மோதுவதிலேயே கவனம் செலுத்துவதாகக் கூறப்பட்டது.
மதுபானக் கொள்கை:
டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட மதுபானக் கொள்கையைச் சுற்றியுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் ஆம் ஆத்மி தோல்வியில் முக்கிய பங்காற்றியுள்ளன.
புதிய கொள்கைபடி மதுபான பாட்டில்களில் '1 வாங்கினால் 1 இலவசம்' போன்ற சலுகைகள் டெல்லியை குடிகாரர்களின் நகரமாக மாற்ற ஆம் ஆத்மி முயல்வதாக பாஜக குற்றம் சாட்ட வழிவகுத்தது.
மேலும் புதிய மதுபான கொள்கை வகுப்பதில் பல்வேறு முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் விசாரணைகள் அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களைக் கைது செய்தது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பிறகு, அவர் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஆம் ஆத்மி அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டது.
பின்னர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருந்தார். பல உயர்மட்டத் தலைவர்களின் கைதுகள் ஆம் ஆத்மி கட்சியை வலுவிழக்க செய்தன.
முக்கிய தலைவர்கள் இல்லாமல் 2020 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஆம் ஆத்மிக்கு சிரமம் ஏற்பட்டது. சிறையிலிருந்து ஜாமீனில் வந்த கெஜ்ரிவால் மக்கள் சம்மதம் இல்லாமல் மீண்டும் முதல்வர் ஆக மாட்டேன் என பதவியை ராஜினாமா செய்து அமைச்சர் அதிஷியை முதல்வர் ஆக்கினார்.
ஷீஷ் மஹால்
தேர்தலுக்கு முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக தொடுத்த அஸ்திரம் 'ஷீஷ் மஹால்'. கெஜ்ரிவால் பதவியில் இருந்தபோது புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சர் இல்லத்தை சொகுசு மாளிகை என வர்ணித்து பாஜக பிரசாரம் செய்தது. 'முதல்வர் இல்லத்தை புதுப்பிக்க முதற்கட்ட மதிப்பீடு ரூ.7.91 கோடி என்று கண்டறியப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டபோது இது 8.62 கோடியாக உயர்ந்தது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் பொதுப்பணித் துறை பணியை முடித்த நேரத்தில், செலவு ரூ.33.66 கோடியாக உயர்ந்தது'என்று பாஜக கூறியது. ஷீஷ் மகாலில் 15 தங்க முலாம் பூசப்பட்ட கழிவறைகள் இருப்பதாக பாஜக கூறியது. அனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மி ஆதாரம் கேட்டது. ஆனால் கெஜ்ரிவால் அங்கிருந்து வெளியேறியபோது அனைத்தும் மாயமானதாக பாஜக கூறியது.
இதனையடுத்து ஷீஷ் மகால் ஜோடிக்கப்பட்ட பொய் என்றும் அதை நிரூபிக்க தான் தயார் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆடம்பரமான வாழ்க்கை முறை குறித்தும், பிரதமரின் ராஜ்மகால் இல்லத்தைக் காட்ட பாஜகவுக்கு துணிவு இருக்கிறதா என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
ஆனால் பாஜகவின் இடைவிடாத ஷீஷ் மகால் பிரச்சாரம் வாக்காளர்களை வெகுவாக பாதித்ததாகத் தெரிகிறது. குறிப்பாக கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஊழலுக்கு எதிரான 'தூய்மையான அரசியல்' என்ற பிம்பத்தை உடைத்து. தேர்தல் முடிவுகள் இதை வெளிப்படுத்துகின்றன.