என் மலர்
இந்தியா
மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம்: வீடியோவை பகிர வேண்டாம் என சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
- இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படும் விடியோ வெளியானது
- இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்
மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ வெளியானது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடி மணிப்பூர் கலவரம் குறித்து மவுனம் சாதித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது இந்த விவகாரமும் சேர்ந்துள்ளது.
இச்சம்பத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இதுதொடர்பான வீடியோவை பகிர வேண்டாம் என் டுவிட்டர் மற்றும் சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இந்திய சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.