என் மலர்
இந்தியா

புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று பதவியேற்பு

- பிரதமர் முன்மொழியும் ஒருவரை ஜனாதிபதி நியமனம் செய்து வந்தார்.
- 2029-ம் ஆண்டு வரை பணியில் இருப்பார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று (பிப்ரவரி 18-ம் தேதி) ஒய்வு பெற்றார். இதையடத்து, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் (EC) உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆவார். இந்நிலையில், நாட்டின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் இன்று (பிப்ரவரி 19) பதவியேற்கிறார்.
இன்று தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்கும் ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் ஜனவரி 26, 2029 வரை நீடிக்கும். இவரது பதவிக்காலத்தில், இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அடுத்த ஆண்டு, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
மேலும், 2027-ம் ஆண்டு குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல்களையும் நடத்துவார். 2029 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ் குமார் ஓய்வு பெறுவார்.