search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிலருக்கு அனைத்தையும் விமர்சித்தே ஆக வேண்டும்: அஸ்வினி வைஷ்ணவ்
    X

    "சிலருக்கு அனைத்தையும் விமர்சித்தே ஆக வேண்டும்": அஸ்வினி வைஷ்ணவ்

    • பயனர்களின் தரவுகள் மீது தாக்குதல் நடப்பதாக ஆப்பிள், குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது
    • இதே போன்ற குற்றச்சாட்டு முன்னர் பொய் என தெரிய வந்தது என அமைச்சர் கூறினார்

    இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் மற்றும் பவன் கேரா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா ஆகியோர் தங்களின் ஐபோனுக்கு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வந்ததாக ஒரு குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    அந்த செய்தியில், "அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் ஹேக்கர்கள் சிலரால் உங்கள் ஐபோனில் உள்ள தனிப்பட்ட தகவல் பரிமாற்ற தரவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. இந்த தகவலை அலட்சியப்படுத்த வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை வெளியிட்ட அந்த எம்.பி.க்கள், ஆளும் பா.ஜ.க. அரசு தங்களை வேவு பார்க்க முயல்வதாக குற்றம் சாட்டினர்.

    அவர்கள் குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கட்சி அலுவலகத்தில் பலருக்கு இவ்வாறு மின்னஞ்சல் வந்துள்ளதாகவும், இதன் மூலம், ஆளும் பா.ஜ.க. அரசு அதானி விவகாரம் உட்பட பல விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுவதாகவும் கூறினார்.

    இந்நிலையில், ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. தெளிவில்லாமல் இருக்கும் அதன் அறிக்கையில் இந்த தகவல் உண்மையா பொய்யா என்பதை அந்நிறுவனம் உறுதிபடுத்தவோ மறுக்கவோ இல்லை.

    இதற்கிடையே மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக பார்க்கிறது. நடந்தது என்ன என்பது முழுவதுமாக ஆராயப்படும். தாங்கள் ஆட்சியில் இருந்த போது தங்கள் குடும்ப முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்ட சிலருக்கு நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாது. அவர்கள் அனைத்தையும் விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 150 நாடுகளில் உள்ள பயனர்களுக்கு ஆப்பிள் இத்தகைய குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் அனுப்பியுள்ளது. ஆனால், நடந்தது என்ன என்பது குறித்து அந்நிறுவனமே தெளிவான விளக்கத்தை இதுவரை தரவில்லை. முன்னர் ஒரு முறை இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நீதிமன்ற மேற்பார்வையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இறுதியில் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிய வந்தது.

    இவ்வாறு அஸ்வினி கூறினார்.

    Next Story
    ×