search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஹத்ராஸ்  பலிகள்.. காற்றை நிறைத்த மரண ஓலம் - நெரிசலில் சிக்கியவர்கள் சொல்லும் அதிர்ச்சி விவரங்கள்
    X

    ஹத்ராஸ் பலிகள்.. காற்றை நிறைத்த மரண ஓலம் - நெரிசலில் சிக்கியவர்கள் சொல்லும் அதிர்ச்சி விவரங்கள்

    • மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.
    • கூட்டநெரிசலில் திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அலறல் அந்த பகுதியையே ஆட்கொண்டுள்ளது.

    விபத்தில் சிக்கிய தனி நபர்களின் கதைகள் மனதை ரணமாக்குவதாக உள்ளன. டிரக்கில் கிடத்தப்பட்ட 6 சடலங்களுக்கு மத்தியில் அமர்ந்து அழுதுகொண்டிருக்கும் பெண் ஒருவர் அங்கு உள்ள தனது குழந்தையின் உடலை வெளியே எடுக்க உதவி கேட்டு அழுகிறார். படுகாயமடைந்த பலர் மருத்துவமனை நுழைவிடத்தில் கிடத்தப்பட்டு சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். மொத்த மருத்துவமனையிலும் ஒரே ஒரு மருத்துவரே உள்ளார் என்று அங்குள்ளவர்கள் குற்றமசாட்டுகின்றனர்.

    அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட போதுமான வசதிகள் அங்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் ஓருவர் மீது ஒருவர் உயிரிழந்த உடல்களைப் போல் கிடக்கும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அறிவித்திருக்கும் நிலையில் முதலில், படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    கூட்ட நெரிசலில் உயிர்பிழைத்தவர்கள் சொல்லும் விவரங்கள் மேலும் அதிர்ச்சியூட்டுகின்றன. நிகழ்ச்சி முடிந்ததும் போலே பாபா அமர்ந்திருந்த இடத்தின் காலடி மண்ணை எடுக்க பலர் காத்திருந்தனர். நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோதே திடீரென ஒருவர் பின் ஒருவராக மயங்கிவிழுந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தனது தாய், மனைவி, 16 வயது மகள் ஆகிய மூவரையும் இழந்த வினோத் என்பவர் கூறுகையில், 'நான் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். அவர்கள் வெளியே ஒன்றாக வெளியே சென்றனர் என்பது மட்டுமே எனக்கு தெரியும், ஆனால் இங்கே வந்தது தெரியாது. இந்த விபத்தை கேள்விப்பட்டு அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வந்து தேடியபோது எனது மனைவி மகள் உடல்களை கண்டெடுத்தேன். எனது தாயின் உடல் கிடைக்கவே இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

    மகளைத் தொலைத்த தாய் ஒருவர் கூறுகையில், எனது மகளால் பேச முடியாது அழ மட்டுமே முடியும் அவளை எங்கு தேடியும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று தேடியபடி செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறார்.

    குழந்தைகளை இழந்த தாய்மார்கள், தாய்மார்களை இழந்த குழந்தைகள் என பலர் இந்த சம்பவத்தில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். பல வருடங்களாக போலே பாபாவின் சத்சங்கத்தை கேட்க வந்துகொண்டிருந்தவர்களே இந்த கூட்டத்தில் அதிகம். இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து போலே பாபா தலைமறைவாகியுள்ளார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×