search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நடிகைக்கு பாலியல் தொல்லை: நடிகர் முகேஷ் கைது
    X

    நடிகைக்கு பாலியல் தொல்லை: நடிகர் முகேஷ் கைது

    • சிறப்பு விசாரணை குழுவினர் முன்னிலையில் நடிகர் முகேஷ் கொச்சியில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
    • நடிகர் சித்திக் முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியை சேர்ந்த நடிகை, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகரும், கொல்லம் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது மரடு போலீசில் புகார் கொடுத்து இருந்தார். அதில், கடந்த 2009-ம் ஆண்டு நாடகமே உலகம் என்ற சினிமா படப்பிடிப்பு திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியில் நடந்தது. அங்குள்ள ஓட்டலில் நடிகர் முகேஷ் தங்கி இருந்தார்.

    அப்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை அந்த ஓட்டலுக்கு வரவழைத்தார். அங்கு சென்ற எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதேபோல் நடிகர் மணியன் பிள்ளை ராஜு உள்பட 6 பேர் மீது அந்த நடிகை புகார் தெரிவித்து இருந்தார்.

    அதன் பேரில் போலீசார் முகேஷ் மீது பெண்மையை அவமதித்தல், பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நடிகர் முகேஷ் முன் ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகையின் வாக்குமூலத்தில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி முகேசுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதோடு விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இந்தநிலையில் நடிகைகள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவினர் முன்னிலையில் நடிகர் முகேஷ் நேற்று கொச்சியில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெறப்பட்டது.

    விசாரணைக்கு பின்னர் நடிகர் முகேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீசில் நடிகை புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நடிகர் சித்திக் முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தனி அமர்வு நீதிபதி டயஸ் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காலதாமதம் ஆனதால் ஒரு வழக்கின் முக்கியத்துவம் குறைந்து விடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் சித்திக் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், கொச்சியில் உள்ள அவரது 2 வீடுகளுக்கு சிறப்பு விசாரணை குழுவினர் விரைந்து சென்று தேடினர். அங்கு சித்திக் இல்லை. அவரது செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    தலைமறைவான நடிகர் சித்திக்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளனர்.

    நடிகை பாலியல் புகாரை தொடர்ந்து, மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×