search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கனமழை நீடிப்பு: கேரளாவில் 14 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் வரை எச்சரிக்கை
    X

    கனமழை நீடிப்பு: கேரளாவில் 14 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் வரை எச்சரிக்கை

    • குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
    • மலை-கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

    திருவனந்தபுரம் நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. திருவனந்தபுரம் சாக்கா தோப்பமுடுக்கு பகுதியை சேர்ந்த விக்ரமன்(வயது82) என்ற முதியவர் தனது வீட்டின் முன் தேங்கியிருந்த தண்ணீரில் இறந்துகிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்தாரா? அல்லது மழை தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலத்தில் மேலும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

    இந்நிலையில் கேரளாவில் 14 மாவட்டங்களில் இன்று முதல் புதன்கிழமை வரை பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

    குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பெய்யும் என்பதால் நகர பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட லாம் என்பதால் மலை-கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Next Story
    ×