search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆட்சி செய்வது இடதுசாரி அரசு என்பதால்தான் ஹேமா கமிட்டி சாத்தியமானது - பினராயி விஜயன் பதிலடி

    • குஜராத்தில் பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு அவர்களுக்கு வலது சாரிகளால் பலத்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.
    • கேரள திரைத்துறைக்குச் சமமான அல்லது அதைவிட பெரிய திரைத்துறை கொண்ட மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை இல்லை

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்டவைகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டியை அரசு அமைத்தது. அதன் விசாரணை அறிக்கையில் பட வாய்ப்புக்காக பல நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

    இதையடுத்து நடிகைகளின் பாலியல் புகார்களின் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். நடிகைகள் புகாரின் பேரில் நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக கேரள ஐகோர்ட் சிறப்பு இருக்கை அமைத்தது. இந்த சிறப்பு இருக்கையை சேர்ந்த நீதிபதிகள் முன் ஹேமா கமிட்டியின் அறிக்கை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமா கமிட்டி அறிக்கை 5 வருடங்களுக்கு முன்னரே கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதன்மீது இதுநாள் வரை எந்த நடவைடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி தங்களது கண்டனங்களை நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது கல்கத்தா பெண் டாகடர் கொலை போல நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குஜராத்தில் பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு அவர்களுக்கு வலது சாரிகளால் பலத்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.

    எனவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து அவரும் நிலையில் பெண்களை பாதுகாக்க கேரள அரசு தொலைநோக்கு திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல் நாட்டில் இதுவரை உள்ள எந்த மாநில அரசாங்கமும் திரைத்துறையில் தலையிட்டதில்லை. கேரள திரைத்துறைக்குச் சமமான அல்லது அதைவிட பெரிய திரைத்துறை கொண்ட மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை இல்லை. ஆனால் கேரளாவில் இது சாத்தியமானதற்குக் காரணம் இங்கு இடதுசாரி அரசு ஆட்சி அதிகாரத்தில் உள்ளதே ஆகும். ஹேமா கமிட்டியில் தங்களது புகார்களை தெரிவித்தவர்களும், இன்னும் தெரிவிக்காதவர்களும் போலீசில் முன்வந்து புகார் அளிக்கலாம்.அந்த புகார்கள் மீது முழுமையான கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×