search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹேமா கமிட்டியின் 3,896 பக்க முழுமையான அறிக்கை ஆய்வு- 20 பேரிடம் முதற்கட்டமாக சிறப்பு குழு விசாரணை
    X

    ஹேமா கமிட்டியின் 3,896 பக்க முழுமையான அறிக்கை ஆய்வு- 20 பேரிடம் முதற்கட்டமாக சிறப்பு குழு விசாரணை

    • ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • அடுத்தகட்ட நடவடிக்கையாக சாட்சியம் அளிக்க வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பதாக வந்த தகவல்களின் அடிப்படையில், அது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிட்டியை கேரள அரசு கடந்த 2017-ம் ஆண்டு அமைத்தது.

    பழம்பெரும் நடிகை மற்றும் ஓய்வுபெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அடங்கிய அந்த கமிட்டியின் முன்பு மலையாள திரையுலகை சேர்ந்த ஏராளமான நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து தங்களின் விசாரணை அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு மாநில அரசிடம் ஹேமா கமிட்டி கொடுத்தது.

    ஆனால் அந்த அறிக்கையை அரசு உடனடியாக வெளியிடவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த அறிக்கையை அரசு வெளியிட்டது. அதில் சினிமா வாய்ப்புக்காக மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது அம்பலமானது.

    இது மலையாள திரையுலகில் புயலை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து நடிகைகளுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அரசு நியமித்தது. அந்த குழுவினர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த நடிகைகளிடம் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    இந்தநிலையில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் ஹேமா கமிட்டியின் முழுமையான விசாரணை அறிக்கை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மொத்தம் 3,896 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையை ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளின் ஆய்வு தொடர்ந்து 5 நாட்களாக நடந்தது.

    இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சாட்சியம் அளிக்க வேண்டியவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். அதன்படி ஹேமா கமிட்டியிடம் மிகவும் பாதிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கும் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் 20 பேரிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்படுகிறது.

    அவர்களை 10 நாட்களுக்குள் நேரடியாக தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற திட்டமிடப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெண் என்பதால், அவர்கள் அனைவரிடமும் சிறப்பு புலனாய்வு குழுவின் பெண் அதிகாரிகளே விசாரணை நடத்த உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு மீதமுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    வாக்கு மூலம் அளித்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதனடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். சட்ட நடவடிக்கையை விரும்புவோரின் வாக்குமூலத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று சிறப்பு புலனாய்வுகுழு தெரிவித்திருக்கிறது.

    எனவே பாதிக்கப்பட்டவர்களிடம் விரைவிலேயே விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×