search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் கலவரத்தின்போது மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம்: குடும்பத்தினருடன் தப்பி ஓடியபோது நடந்த கொடுமை
    X

    மணிப்பூர் கலவரத்தின்போது மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம்: குடும்பத்தினருடன் தப்பி ஓடியபோது நடந்த கொடுமை

    • நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
    • அவமானத்தால் வாழ்வை முடித்துக் கொள்ள விரும்பியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைக்கு 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாலியல் வன்கொடுமை, வீடுகள் சூறை, தீவைப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. இதனால் ஏராளமானோர் ஊரை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர். மே 3ம் தேதி தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடந்த வன்முறை தொடர்பாக 6500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த வன்முறையின் கோரமுகம் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மே மாத துவக்கத்தில் வன்முறையின்போது 2 பெண்கள் நிர்வாணமாக ஊருக்குள் அழைத்து வந்தது தொடர்பான வீடியோ வெளியானபின்னர் மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கலவரம் நடந்த அன்று மேலும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறை கும்பலில் இருந்து உயிர்தப்பி நிவாரண முகாமில் தங்கியிருக்கும் அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

    மே 3ம் தேதி மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது நிரம்பிய அந்த பெண், தனது வீடு வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, அந்த வீட்டில் இருந்து தனது இரண்டு மகன்கள், மருமகள் மற்றும் அவரது அண்ணி ஆகியோருடன் தப்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் மனுவில் கூறி உள்ளார்.

    'என்னையும் எனது குடும்பத்தின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றுவதற்காகவும், சமூகத்தில் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் இதுவரை தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியில் சொல்லாமல் இருந்தேன். அவமானத்தால் என் வாழ்வை நானே முடித்துக் கொள்ள விரும்பினேன். பின்னர் பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி பேசும் செய்திகளைப் பார்த்த பிறகு, போலீசில் புகார் அளிப்பதற்கு எனக்கு தைரியம் வந்தது' என அந்த பெண் கூறியிருக்கிறார்.

    அவரது புகார் தொடர்பாக பிஷ்னுபூர் காவல் நிலையத்தில் ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    நான் என் மருமகளை என் முதுகில் தூக்கிக்கொண்டு என் இரண்டு மகன்களையும் கையில் பிடித்துக்கொண்டு என் அண்ணியுடன் அந்த இடத்திலிருந்து ஓட ஆரம்பித்தேன். அண்ணியும் ஒரு குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தார். அப்போது நான் தடுமாறி சாலையில் விழுந்தேன். அப்போது என் அண்ணி என்னை நோக்கி ஓடி வந்து என் மருமகளை என் முதுகில் இருந்து தூக்கிக் கொண்டு என் இரண்டு மகன்களுடன் தப்பி ஓடினார்.

    பின்னர் ஒரு வழியாக நான் எழுந்திருக்கையில், ஐந்தாறு ஆண்கள் என்னைப் பிடித்துவிட்டனர். அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கியதுடன் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    இவ்வாறு அந்த பெண் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார்.

    'ஜீரோ எஃப்ஐஆர்' என்பது எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்யப்படலாம். குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலையம் அந்த எப்.ஐ.ஆரை சரியான அதிகார வரம்பிற்கு அனுப்ப வேண்டும். பின்னர் அந்த காவல்நிலையம் அதை விசாரிக்கும். இந்த வழக்கைப் பொருத்தவரை சுராசந்த்பூரில் உள்ள காவல் நிலையம் விசாரணை நடத்துகிறது.

    Next Story
    ×