search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தியால் 250 ரூபாய் நஷ்டம் அடைந்தேன்.. வினோத வழக்கு தொடர்ந்த பீகார் ஆசாமி- ஏன் தெரியுமா?
    X

    ராகுல் காந்தியால் 250 ரூபாய் நஷ்டம் அடைந்தேன்.. வினோத வழக்கு தொடர்ந்த பீகார் ஆசாமி- ஏன் தெரியுமா?

    • டெல்லியில் புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவன் திறப்பு விழா நடைபெற்றது.
    • அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது

    பீகாரை சேர்ந்த ஒருவர் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் தனக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தின் சோனுபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முகேஷ் சவுத்ரி. கடந்த வாரம், 'இந்திய அரசுக்கு எதிராக சண்டையிட வேண்டும்' என்ற ராகுல் காந்தி சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் கையில் இருந்த பக்கெட்டை கீழே போட்டுவிட்டேன்.

    'அதில் இருந்த 5 லிட்டர் பால் கொட்டியதில் எனக்கு 250 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதற்கு ராகுல் காந்தியே காரணம். நாட்டின் இறையாண்மைக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியது எனக்கு அதிர்ச்சி அளித்தது. எனவே ராகுல் காந்தியின் மீது, தேசத்துரோகத்திற்கான பிரிவு 152 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிய வேண்டும்' என்றும் கூறி ரோசரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    முன்னதாக கடந்த வாரம் ஜனவரி 15 ஆம் தேதி டெல்லியில் புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகமான இந்திரா பவன் திறப்பு விழா நடைபெற்றது.

    இதில் பேசிய ராகுல் காந்தி, நமது போராட்டம் பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக மட்டுமே என்று நினைக்க வேண்டாம். நீங்கள் அப்படி நினைத்தால், உங்களுக்கு நிலைமை புரியவில்லை என்று அர்த்தம்.

    பாஜக-வும், ஆர்எஸ்எஸ்-ம் சேர்ந்து, நாட்டின் ஒவ்வொரு நிறுவனத்தையும் கைப்பற்றி விட்டன. அதனால், பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாமல், இந்திய அரசுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும் என்று பேசினார்.

    இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான கருத்து எனக் கூறி அவரை பாஜக விமர்சித்தது. ராகுலின் பேச்சுக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×