என் மலர்
இந்தியா
வாரம் ஒரு நாட்டுக் கோழி கொடுத்தா லோன் தரேன்.. விவசாயியை ஏமாற்றி ஏப்பம் விட்ட பேங்க் மேனேஜர்
- வாரந்தோறும் சனிக்கிழமை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர்.
- அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார்.
வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று வரும் அழைப்பை நம்பி தினமும் பலர் ஏமாறுகின்றனர். ஆனால் சத்தீஸ்கரில் விவசாயிக்கு கடன் தருகிறேன் என கூறி வங்கி மேனேஜரே ஏமாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள மஸ்தூரி நகரில் வங்கி மேனேஜர், விவசாயியிடம் ரூ.12 லட்சம் கடன் தருவதாக கூறி விவசாயியிடம் உள்ள மொத்தம் 900 கோழிகளையும் வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார் வங்கி மேனேஜர்.
பாதிக்கப்பட்ட விவசாயி ரூப்சந்த் மன்ஹர், மஸ்தூரியில் நாட்டுக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி கடனுக்காக [ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா] வங்கியை அணுகினார். அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார். இதை நம்பிய மன்ஹர் பணத்தை ஏற்பாடு செய்து மேனேஜருக்கு கொடுத்தார்.
ஆனாலும் ஆசை அடங்காத மேனேஜர், கோழிக் கறி மீது தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தி, வாரந்தோறும் சனிக்கிழமை மன்ஹரை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர். கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மன்ஹர் இதுவரை மொத்தம் ரூ.39,000 மதிப்புள்ள 900 கோழிகளை மேனேஜருக்கு கொடுத்துள்ளார்.
இருந்தும் வங்கி மேலாளர் கடன் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மன்ஹர் சம்பவத்தின் விவரங்களையும், தான் சப்ளை செய்த கோழிகளுக்கான பில்களையும் போலீசிடம் சமர்ப்பித்து புகார் அளித்தார்.
தனக்கு நீதி கிடைக்காவிட்டால் வங்கியின் முன் தீக்குளிக்கப் போவதாகக் கூறி, மன்ஹர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து வங்கி மேனேஜர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.