search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திடீர் கோளாறு.. அவசரமாக ஏரி ஓரமாக தரையிறங்கிய இந்திய வான்படை ஹெலிகாப்டர்
    X

    திடீர் கோளாறு.. அவசரமாக 'ஏரி' ஓரமாக தரையிறங்கிய இந்திய வான்படை ஹெலிகாப்டர்

    • ஹெலிகாப்டர் ஜான்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • ஹெலிகாப்டர் துங்கரியா எனும் ஏரியின் அருகில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இந்திய வான்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. போபாலில் உள்ள ஏரி ஒன்றின் அருகில் இந்திய வான்படை ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இந்த ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் ஐந்து பேர் பயணம் செய்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று பெராசியா காவல் நிலைய கண்காணிப்பாளர் நரேந்திர குலாஸ்த் தெரிவித்தார். போபாலில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் ஜான்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட சமயத்தில் இந்திய வான்படை ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, துங்கரியா எனும் ஏரியின் அருகில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஏரி போபால் விமான நிலையத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

    ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, இன்று மாலை 5 மணியளவில் ஹெலிகாப்டர் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது. போபால் மற்றும் நாக்பூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹெலிகாப்டரை சரி செய்துள்ளனர்.

    Next Story
    ×