search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு மீட்பு பணி: என்னையும் சேர்த்துக்கோங்க.. ராணுவத்திற்கு 3-ம் வகுப்பு மாணவன் கடிதம்
    X

    வயநாடு மீட்பு பணி: என்னையும் சேர்த்துக்கோங்க.. ராணுவத்திற்கு 3-ம் வகுப்பு மாணவன் கடிதம்

    • வயநாட்டில் மீட்பு பணியில் முப்படைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
    • சிறுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    வயநாடு:

    வயநாடு மாவட்டம் முண்டகை, சூரல்மலை, மேப்பாடு ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 350-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தொடர்ந்து வயநாட்டில் மீட்பு பணியில் முப்படைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரயான் என்ற சிறுவன் இந்திய ராணுவத்திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளான்.

    அதில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவத்தினர் பல்வேறு இன்னல்களை சந்திப்பதோடு, இக்கட்டான இடங்களிலும் மீட்பு பணிகளை துரித கதியில் செய்து வருகிறார்கள். மேலும் பெய்லி பாலம் அமைத்து மீட்பு பணியில் இறங்கி உள்ளார்கள். ராணுவத்தினர் உணவுகளாக பிஸ்கட் சாப்பிடுவதை வீடியோவில் பார்த்தேன். அதனை மட்டும் சாப்பிட்டு சவாலான பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள். மீட்பு பணியில் ஈடுபடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்திய ராணுவத்திற்கு மகிழ்ச்சியுடன் சல்யூட் அடித்துக் கொள்வதோடு, நானும் ராணுவத்தில் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட ஆர்வமாக உள்ளேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் சிறுவன் ரயான் எழுதிய கடிதத்திற்கு பதில் தெரிவித்து இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்ததாவது:-

    சிறுவன் ரயானின் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை ஆழமாக தொட்டன. இக்கட்டான காலங்களில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு உள்ளோம். நீங்கள் அனுப்பிய கடிதம் இந்தப் பணியினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களை போன்ற ஜாம்பவான்கள் ராணுவத்தில் இணைவது பெருமையே. நீங்கள் ராணுவ சீருடை அணிந்து எங்களின் பக்கத்தில் நிற்கும் நாளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்றுபட்டு நமது தேசத்தை பெருமைப்படுத்துவோம் என்று கூறப்பட்டு இருந்தது.

    சிறுவன் ரயான் ராணுவத்திற்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. மேலும் சிறுவனின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    Next Story
    ×