search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ஈஷா யோகா மையத்தில் ஆய்வு மேற்கொள்ள காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை
    X

    ஈஷா யோகா மையத்தில் ஆய்வு மேற்கொள்ள காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் தடை

    • ஆட்கொணர்வு மனுவை இனிமேல் உச்சநீதிமன்றம் விசாரிக்கும்.
    • நிலவர அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டுதருமாறு கூறி கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனை குற்றவழக்குகள் உள்ளன? என்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தனர்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈஷா யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகாவும் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை விவரங்களை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய இருந்தனர்.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் ஈஷா யோகா மையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக இன்றே விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கோரிக்கை விடுத்தனர். தலைமை நீதிபதி அதை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

    விசாரணைியின்போது காணொலி காட்சி மூலமாக ஈஷா மையத்தில் உள்ள பெண் துறவி லதாவிடம் தலைமை நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அப்போது லதா, தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே ஈஷா மையத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஏற்று தமிழ்நாடு காவல்துறை ஈஷா யோகா மையத்தில் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளார். அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

    ஆட்கொணர்வு மனு தாக்கல் தொடர்பான பெண்கள், ஆசிரமத்தில் உள்ள பிற பெண்களுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை அளிக்க கோவை சட்ட சேவைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன் நிலவர அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அத்துடன் விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    Next Story
    ×