search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜெகன்மோகன் ரெட்டி செய்த 5 முக்கிய தவறுகள்
    X

    ஜெகன்மோகன் ரெட்டி செய்த 5 முக்கிய தவறுகள்

    • ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் ஆந்திராவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.
    • ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் கூட்டணி அமைப்பதில் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி 5 முக்கிய தவறுகளை செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

    கடனில் தவிக்கும் மாநிலம்

    ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக்காலத்தில் ஆந்திர பிரதேசத்தின் நிதி நிலைமை ஒரு முக்கியமான பிரச்சனையாக இருந்தது. அவர் நவரத்தினலு என்று அழைக்கப்படும் 9 புதிய திட்டங்களை கொண்டு வந்தார். இதற்காக ரூ.13.5 லட்சம் கோடி கடனில் ஆந்திர மாநிலம் சிக்கித் தவிக்கிறது.

    இந்த திட்டங்களால் பிரபலமான வாக்குகளை பெற்றிருந்தாலும் பலரது கோரிக்கைகளை இந்த திட்டத்தின் மூலம் நிறைவேற்றவில்லை. அதனால் வாக்காளர்களுக்கு ஆட்சியின் மீது ஒரு விதமான அதிருப்தி ஏற்பட்டது.

    வேலைவாய்ப்பு

    மாநிலத்தில் போதிய கட்டமைப்பு, நம்பகத்தன்மையற்ற மின்சாரம், குடிநீர் பற்றாக்குறை, அதிக மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் வாக்காளர்களை விரக்தியடைய செய்தது.

    ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் ஆந்திராவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் பொதுமக்களின் அதிருப்திக்கு பங்களித்தது.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இலக்காகக் கொண்ட ஜெகன்மோகன் ரெட்டியின் கொள்கைகளும் குறிப்பிடத்தக்க விமர்சனங்களை எதிர்கொண்டன.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகள் மற்றும் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்குவது என அறிவித்தார். ஆனால் கபு சமூகத்திற்கு இதே போன்ற சலுகைகளை அவர் வழங்க மறுத்தார். இது வெறுப்புணர்வை தூண்டியது.

    எதிர்க்கட்சிகளும் சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்த ஜெகன்மோகன் ரெட்டி ஒரு பிரிவினரை உதாசீனப்படுத்துவதாக குற்றம் சாட்டினர்.

    வேட்பாளர் தேர்வு

    ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஜெகன்மோகன் ரெட்டியின் வியூகம் அவருடைய கட்சியினரையே அதிருப்தியடைய செய்தது.

    அவர் பல எம்.எல்.ஏ.க்களை தொகுதி இடமாற்றம் செய்தார். மேலும் வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்கினார். 14 எம்.பி.க்கள் மற்றும் 37 எம்.எல்.ஏ.க்களை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கினார். அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.

    இந்த நடவடிக்கை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரவலான அதிர்ச்சிக்கு வழி வகுத்தது.

    தேர்தல் கூட்டணி

    தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு 2 மாதங்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இது அவருக்கு அனுதாப அலையை ஏற்படுத்தியது.

    மேலும் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தலில் கூட்டணி அமைப்பதில் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. அவர் தனித்தே போட்டியிட்டார்.

    ஆனால் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க. மற்றும் நடிகர் பவன் கல்யாண் கட்சியுடன் பிரமாண்ட கூட்டணி அமைத்தார். பவன் கல்யாண் மூலம் அவருக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி மட்டுமின்றி இளம் ரசிகர் பட்டாளம், கூட்டத்தை கவர்ந்திழுக்கும் திறனும் கிடைத்தது.

    பவன் கல்யாணின் கபு சமூக வாக்குகள் 18 சதவீதம் ஆந்திராவில் உள்ளன. இந்த வாக்குகள் சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிக்கு கிடைத்தது. இதுபோன்ற கூட்டணி அமைக்க ஜெகன் மோகன் ரெட்டி தவறி விட்டார். இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா மற்றும் அவருடைய தாயார் இருவரும் அவருக்கு எதிராகவே நின்றனர்.

    Next Story
    ×