search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசின் வாதங்கள் அனைத்தும் மோசடி- உச்ச நீதிமன்றத்தில் பீட்டா வாதம்
    X

    ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசின் வாதங்கள் அனைத்தும் மோசடி- உச்ச நீதிமன்றத்தில் பீட்டா வாதம்

    • ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
    • புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டாவுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    புதுடெல்லி:

    ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும்; ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? என்று தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

    மேலும் விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு காளைகள் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன; கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, பல சிறந்த நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

    அப்போது ஐல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஐல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பின்பும் காளைகளை பரிசோதிக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    அப்போது பீட்டா முன்வைத்த வாதங்களை மறுக்காமல் எவ்வித பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்யாமல் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தும் மோசடியே என்றும், திருத்தப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் அனைத்தும் கண்துடைப்பே என்றும் பீட்டா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், இதற்கு சாட்சியாக புகைப்படங்கள், செய்திதாள்கள் அடிப்படையில் வெளியான தகவல்களை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.

    அப்போது பேசிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தொடர்பான புகைப்படங்களை உங்களுக்கு எடுத்துக் கொடுத்தது யார்? விதிமுறைகள் மீறல் தொடர்பாக எங்கேனும் புகார் அளித்தீர்களா? புகைப்படங்களின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வர முடியுமா? என பீட்டாவுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். அத்துடன் வழக்கு விசாரணையை நாளை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். நாளை பீட்டா சார்பில் மேலும் வாதங்களை முன்வைக்க அனுமதி அளித்தனர்.

    Next Story
    ×