search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நீதியின் கோவில் கோர்ட்டு என்றாலும் நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல:  கும்பிட்டபடி நின்ற பெண்ணுக்கு நீதிபதி அறிவுரை
    X

    நீதியின் கோவில் கோர்ட்டு என்றாலும் நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல: கும்பிட்டபடி நின்ற பெண்ணுக்கு நீதிபதி அறிவுரை

    • விசாரிக்க சென்ற போலீசார், புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராகவே வழக்குப்பதிவு செய்தனர்.
    • பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2019-ம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள ஒரு ஆராதனை கூடத்தில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து விசாரிக்க சென்ற போலீசார், புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராகவே வழக்குப்பதிவு செய்தனர். அதாவது விசாரிக்க சென்றபோது தங்களை தரக்குறைவாக பேசியதாக அந்த பெண் மீது போலீசார் குற்றம்சாட்டினர். போலீசாரின் இந்த பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.வி.குஞ்சு கிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் நீதிபதி முன்பு கும்பிட்டபடி நின்றார். இதை கண்ட நீதிபதி, "நீதியின் கோவிலாக கோர்ட்டு உள்ள போதிலும் நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல. எனவே கோர்ட்டிற்கு வரும் பாதிக்கப்பட்டவர்கள், வக்கீல்கள் யாரும் நீதிபதிகள் முன் சாமியை கும்பிடுவது போன்று நிற்க வேண்டியது இல்லை. கோர்ட்டு அறைக்குள் அதற்குரிய மரியாதை, கண்ணியத்துடன் நடந்து கொண்டாலே போதும்" என்றார்.

    பின்னர் பாதிக்கப்பட்ட பெண் மனு மீதான விசாரணை முடிவில், புகார் அளித்த பெண் தவறான வார்த்தைகளால் போலீசாரிடம் பேசினார் என்பதை நம்ப முடியவில்லை. எனவே போலீசார் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்கிறேன் என நீதிபதி பி.வி.குஞ்சு கிருஷ்ணன் கூறினார்.

    மேலும் புகார் அளித்த பெண்ணுக்கு எதிராக போலீசார் பதிவு செய்த வழக்கின் பின்னணி குறித்து விசாரணை நடத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.

    Next Story
    ×